

அமெரிக்காவின் வால்மார்ட் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு யார் பொறுப்பு எதனால் இது நடத்தப்பட்டது என்பன போன்ற தகவல்களைப் போலீஸார் இன்னும் வெளியிடவில்லை.
சம்பவம் நடைபெற்ற 90 நிமிடங்களுக்குப் பின்னர் கொலராடோ போலீஸார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், வால்மார்ட் வணிக மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டனர். பெண்மணி ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. துப்பாக்கிச் சூடு ஓய்ந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவ்விடத்தில் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இன்னமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்த ஏரான் ஸ்டீபன் என்ற நபர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "வீட்டுக்குத் தேவையான பலசரக்கு பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்த நின்றிருந்தபோது துப்பாக்கி சூடு சத்தம் கேட்டது. மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஊழியர்களும் அச்சத்தில் கூச்சலிட்டனர். துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகிவிடக் கூடாது என நான் அவசர அவசரமாக வெளியேறினேன்" என்றார்.
என்பிசி தொலைக்காட்சியின் 9 நியூஸ் சேனல் வெளியிட்ட செய்தியில், சம்பவம் நடந்தபோது வால்மார்ட் மையத்தில் இருந்து தனது தாயிடம் தொலைபேசியில் பேசிய இளைஞர் ஒருவர் வணிக மையத்தில் 30 முறை துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதாகக் கூறினார்.
வால்மார்ட் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.