Last Updated : 02 Nov, 2017 05:08 PM

 

Published : 02 Nov 2017 05:08 PM
Last Updated : 02 Nov 2017 05:08 PM

காஷ்மீர் நிலவரம், ஹெட்லி விசாரணையை கூர்ந்து கவனித்த ஒசாமா பின்லேடன்: சிஐஏ தகவல்

அமெரிக்க ராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடன் காஷ்மீர் பிரச்சினை முதல் பாக்-அமெரிக்க பயங்கரவாதி ஹெட்லியின் விசாரணை நடைமுறைகள் ஆகியவற்றை கூர்ந்து கவனித்து வந்ததாக சிஐஏ ஆவணங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் சிஐஏ புதனன்று மேலும் 470,000 கூடுதல் கோப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் லேடன் மகன் திருமண வீடியோ, அவர் விட்டுச் சென்ற நாட்குறிப்புகள் ஆகியவை அடங்கும்.

இதில் காஷ்மீர் நிலவரம், லஷ்கர் தீவிரவாதி ஹெட்லி மீதான அமெரிக்க கோர்ட் விசாரணை ஆகியவற்றையும், இந்தியப் பத்திரிகைகளையும் ஒசாமா பின்லேடன் வாசித்ததாக கூறப்பட்டுள்ளது.

இதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்த ‘Omar Sheikh’s Pak handler Ilyas Kashmiri also handled Headley’ என்ற தலைப்பிட்ட கட்டுரையும் ஒசாமா பின்லேடன் அபோத்தாபாத் வீட்டு கணினியில் இருந்தது தெரியவந்துள்ளது.

அதே போல் ஸ்ரீலங்கா கார்டியன் இதழில் வெளிவந்த இந்தியாவை அச்சுறுத்தும் பயங்கரவாதிகள் பற்றிய கட்டுரையும், பிடிஐ செய்தியான, ‘பாகிஸ்தானை சீர்குலைக்க தாலிபான்களுக்கு உதவும் அல்கொய்தா’ போன்றவைகளும் லேடன் கணினியில் இருந்தது தெரியவந்துள்ளது.

அதே போல் ஹெட்லிக்கும் ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி தொடர்புகளைக் குறிக்கும் சங்கேத மொழியிலான செய்தித் தொடர்புகள் அடங்கிய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியும் பின்லேடன் கணினியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹெட்லி விசாரணைக்காக வாக்குமூலம் அளிக்க இந்தியா மேஜிஸ்ட்ரேட் ஒருவரை அமெரிக்கா அனுப்புவதான செய்தியும் ஒசாமாவுக்கு தெரிந்திருந்தது.

காஷ்மீர் மற்றும் சிலபல பயங்கரவாதிகள் பற்றிய செய்திகளை அறிய செய்தித்தாள்களை ஒசாமா தொடர்ந்து வாசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இகானமிக் டைம்ஸ் செய்தியான இலியாஸ் காஷ்மீரியை கண்டுபிடிக்க அமெரிக்கா வலியுறுத்தல் என்ற 2010-ம் ஆண்டு செய்தியும், ’பாகிஸ்தானிய காஷ்மீர் தீவிரவாதிகள் நேட்டோ படையினருக்கு எதிராக போர்’ என்ற செய்தியும் சேமிக்கப்பட்ட கோப்பில் பின்லேடன் கணினியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவுறுத்தலுக்கு இணங்க சிஐஎ இந்த 470,000 கோப்புகளையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளது. ஆனால் ஒரு 24 வீடியோக்களை சிஐஏ வெளியிடவில்லை, இதில் ஸ்டோரி ஆஃப் இந்தியா என்ற ஒன்றும் அடங்கும். காரணம் அது காப்புரிமை பெற்ற வீடியோக்கள் என்பதால்.

ஸ்டோரி ஆஃப் இந்தியா என்பது இந்திய வரலாறு பற்றிய பிபிசி ஆவணத்தொடர் ஆகும்.

இது தவிரவும் ஒசாமா பின்லேடனின் எண்ணற்ற ஆவணங்கள், ஆடியோ கோப்புகள், பேச்சுக்களும் சிஐஏ வசம் கிடைத்துள்ளன. இவையெல்லாம் அல்குவைதாவுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் இடையே இன்று ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கான காரணங்களை அறிவுறுத்துவதாகவும் அல்குவைதா அமைப்பினுள்ளேயும், அதன் கூட்டாளிகளுக்கு இடையேயும் ஏற்படும் வேறுபாடுகள் குறித்தும் தெரிந்து கொள்ள உதவி புரியும் என்று சிஐஏ தெரிவித்துள்ளது. லேடன் கொல்லப்பட்ட பிறகு அமைப்பு எதிர்கொண்ட கடினப்பாடுகள் குறித்த தகவல்களும் அதில் உள்ளன.

தீவிரவாதங்களினால் இஸ்லாமிய சமுதாயம் மீது ஏற்பட்ட கறைகளினால் தீவிரவாதக் குழுக்களிடையே வேற்பாடுகள் தோன்றிய நிலையில் குழுக்களை ஒசாமா பின்லேடன் ஒருங்கிணைக்க முயற்சி செய்தார் என்று சிஐஏ கருதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x