Published : 27 Jul 2023 06:54 PM
Last Updated : 27 Jul 2023 06:54 PM

ராஜ்நாத் சிங் பேச்சுக்கு எதிர்ப்பு - தற்காப்புத் திறன் இருப்பதாக பாகிஸ்தான் அறிக்கை

இஸ்லாமாபாத்: தேவை ஏற்பட்டால் இந்திய ராணுவம் எல்லை தாண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், தற்காத்துக்கொள்ளும் திறன் தங்கள் நாட்டுக்கு உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

கார்கில் போரின் 24-வது வெற்றி தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. லடாக்கின் திராஸ் பகுதியிலுள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், "கார்கில் போர் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது. பாகிஸ்தானால் முதுகில் குத்தப்பட்டோம். நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த எங்கள் துணிச்சலான வீர மகன்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். எப்போது போர் சூழல் ஏற்பட்டாலும் படைகளுக்கு, பொதுமக்கள் வழங்கும் ஆதரவு மறைமுகமாகவே இருந்துள்ளது. தேவை ஏற்பட்டால் நேரடியாக போர்க்களத்தில் பாதுகாப்புப்படையினருக்கு ஆதரவளிக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும்.

கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்ற நிலையில் நமது ராணுவம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிச் செல்லவில்லை. இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது. இந்தியாஅமைதியை விரும்புவதால்தான் கார்கில் போரில் வென்ற போதும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை நமது ராணுவம் தாண்டி செல்லவில்லை. நாம் சர்வதேச சட்டங்களை மதித்து அதன்படி நடந்து வருகிறோம். நாட்டின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்க நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம். எல்லை கோட்டை கடப்பது அதில் அடங்கும் என்றால் அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்" என தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங்கின் இந்தப் பேச்சுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம், "இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் காஷ்மீர் மற்றும் கில்ஜித் - பல்டிஸ்தான் குறித்து "மிகவும் பொறுப்பற்ற" கருத்துகளைத் தெரிவிப்பது இது முதல் முறையல்ல. இந்தியாவின் போர்க்குணமிக்க சொல்லாட்சிகள் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நாங்கள் அந்நாட்டுக்கு ஆலோசனை கூறுகிறோம்" என தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பிரச்சினை காரணமாகவும், பாகிஸ்தானில் இருந்து நடைபெறும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாகவும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு அடிக்கடி பாதிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று பிரிக்கப்பட்டன. இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் உறவு மேலும் விரிசலடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x