Published : 24 Nov 2017 09:51 AM
Last Updated : 24 Nov 2017 09:51 AM

உலக மசாலா: எதுக்கு இவ்வளவு ரிஸ்க்?

ங்கிலாந்தைச் சேர்ந்த நடாலி ரெனால்ட்ஸ், தன் வீட்டில் நாய், பூனைகளுடன் ஒரு நரியையும் வளர்க்கிறார்! “பிறந்த இரண்டாவது நாள், தாய் இல்லாததால் இந்த நரி என்னிடம் வந்தது. ஒரு குழந்தையைப்போல் இரவும் பகலும் பால் கொடுத்து கவனித்துக்கொண்டேன். 8 மாதங்களாகிவிட்டன. ஓரளவு வளர்ந்தும்விட்டது. என் 5 வயது மகளுக்கும் 3 வயது மகனுக்கும் மிகச் சிறந்த நண்பன் இந்த நரிதான். வீட்டுக்குள்ளும் தோட்டத்திலும் நரிக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் நான் விதிக்கவில்லை. ஒரு நாயைப்போல நரியும் மிகவும் அன்பாக இருக்கிறது. சொல்வதைப் புரிந்து கொள்கிறது. சில நாட்கள் நாய், பூனை, குழந்தைகளோடு நரியையும் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வேன். பார்ப்பவர்கள்தான் மிரள்வார்கள். எங்களின் பாதுகாப்புக்காக இரவில் மட்டும் நரியை ஒரு தனி அறையில் அடைத்துவிடுவேன். இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு காட்டில் விட்டுவிடும் எண்ணம் இருக்கிறது” என்கிறார் நடாலி. “வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது தவறு. எந்த நேரமும் அவற்றால் நமக்கு ஆபத்து ஏற்படலாம். ஏதாவது அசம்பாவிதம் நடந்த பிறகு வருந்துவதைவிட, வரும்முன் தடுத்துவிடுவதே புத்திசாலித்தனம். காட்டில் வளரும் விலங்குகள் காட்டில் வளர்வதே விலங்குகளுக்கும் நல்லது, நமக்கும் நல்லது” என்கிறார் கால்நடை மருத்துவர் லிடியா பாரி.

எதுக்கு இவ்வளவு ரிஸ்க்?

நெ

தர்லாந்தைச் சேர்ந்தவர் 68 வயது விம் க்ருய்ஸ்விக். இவரது முக்கிய பொழுதுபோக்கு கடற்கரையில் ஒதுங்கும் பொருட்களைச் சேகரிப்பதுதான். கடந்த 34 ஆண்டுகளாக ஸான்ட்வூர்ட் கடற்கரையில் 1,200 கடிதங்களைச் சேகரித்து இருக்கிறார்! கடிதங்களை எழுதி, அதைத் தண்ணீர்ப் புகாத ஒரு புட்டியில் வைத்து, கடலுக்குள் விடும் பழக்கத்தை உலகம் முழுவதும் பலரும் காலம் காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடற்கரையில் இப்படி ஒதுங்கும் புட்டிகளைச் சேகரித்து, அவற்றில் உள்ள கடிதங்களைப் பத்திரமாகக் காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார் இவர். “1983-ம் ஆண்டு முதல் முறையாக மூன்று புட்டிகளைக் கடற்கரையில் இருந்து எடுத்தேன். திறந்து பார்த்தபோது ஆச்சரியமடைந்தேன். ஒவ்வொரு புட்டியிலும் ஒரு கடிதமும் ஒரு முகவரி எழுதப்பட்ட கடிதமும் வைக்கப்பட்டிருந்தன. மூன்று கடிதங்களுக்கும் அவரவர் முகவரிக்குக் கடிதங்கள் எழுதி அனுப்பினேன். மூவரும் பதில் கடிதங்களை எழுதியபோது நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டேன். அன்றிலிருந்து கடற்கரையில் ஒதுங்கும் புட்டிகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். கடலுக்குள் புட்டிகளில் கடிதங்களை அனுப்பும்போது ஒருவர் கையில் கிடைக்க சில நாட்களோ, சில வாரங்களோ, சில மாதங்களோ கூட ஆகலாம். யாரிடமும் கிடைக்காமல் கூடப் போகலாம். இன்றைய இணைய உலகில் இதுபோன்ற விஷயங்களில் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிட்டதாலும் கடற்கரைகளைச் சுத்தம் செய்வதாலும் புட்டிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதுவரை 600 கடிதங்களுக்குப் பதில் எழுதியிருக்கிறேன்” என்கிறார் விம் க்ருய்ஸ்விக். நூலகராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒவ்வொரு புட்டியையும் அழகாக அடுக்கி, குறிப்புகளையும் எழுதி சிறிய அருங்காட்சியகம் ஒன்றை வைத்திருக்கிறார்.

அட, சுவாரசியமான பொழுதுபோக்கு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x