

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அந்நாட்டு ராணுவமும் அமெரிக்க ராணுவமும் புதன்கிழமை தனித்தனியே நடத்திய வான் வழி தாக்குதலில் 55 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற 7 பழங்குடியின மாவட்டங்களில் ஒன்றான வடக்கு வசிரிஸ்தான், உள்நாட்டு மற்றும் தலிபான் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்குகிறது. இவர்களைக் குறிவைத்து கடந்த மாதம் வான் மற்றும் தரை வழி தாக்குதலை ராணுவம் தொடங்கியது. முன்னதாக அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.
மிராளி பகுதியில் ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோதலில் 5 வீரர்கள், 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலையில் ஷாவல் பள்ளத்தாக்கிலிருந்து தப்பிக்க முயன்றவர்களைக் குறிவைத்து வான் வழி தாக்குதல் நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இத்துடன் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்றும் வரும் இந்தத் தாக்குதலில் மொத்தம் 480 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ஆப்கன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பஜாவுர் பகுதியில் உள்ள 5 கிராமங்களில் பதுங்கி உள்ள தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.
அமெரிக்கா தாக்குதல்
வடக்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க ராணுவம் புதன்கிழமை நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தடகெல் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைக் குறிவைத்து 4 ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதல் இது. கடந்த 10-ம் தேதி நடத்திய தாக்குதலில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.