

பிலிப்பின்ஸில் ‘ரம்மசன்’ புயல் தாக்குதலுக்கு பலியா னோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித் துள்ளது. லட்சக் கணக்கான மக்கள் 2-வது நாளாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தேசிய பேரிடர் தணிப்பு மற்றும் நிர்வாக கவுன்சில் தலைவர் அலெக்சாண்டர் பமா செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை கூறியதாவது: ரம்மசன் புயல் தாக்கிய பகுதிகளில் உயிரிழப்பை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 4 லட்சம் பேர் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எச்சரிக்கையை மீறி வெளியில் சென்றவர்களில் பலர் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தும், கட்டிடங்கள் இடிந்து விழுந்தும் பலியாயினர். இதுவரை 38 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.
இன்னமும் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மணிலா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமை கரையைக் கடந்த இந்தப் புயல் காரணமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்தன.