விமானங்களில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்க சலுகை வழங்கும் சிங்கப்பூர் அரசு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சிங்கப்பூர்: விமானங்களில் உயிரி எரிபொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு சலுகைகளை வழங்குகிறது.

தற்போதைய உலக சூழலுக்கு பசுமை இல்ல வாயு உமிழ்வை ஏறக்குறைய பூஜ்ய நிலைக்கு குறைப்பதற்கான அவசர தேவை உருவாகியுள்ளது. கார்பன் உமிழ்வால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை உணர்ந்து உலக நாடுகள் இன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் வளங்களுக்கு முன்னுரிமை தந்து அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில் சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் விமானங்களில் உயிரி எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, உயிரி எரிபொருளை அதிகளவில் பயன்படுத்தும் விமான சேவை நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் ஊக்குவிப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு, விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை 2050-க்குள் கார்பன் உமிழ்வை பூஜ்யம் நிலைக்கு குறைப்பதற்கு உறுதியேற்றுள்ளன. அது சாத்தியப்பட வேண்டும் எனில், நிலையான உயிரி பொருள் விநியோகம் சுமார் 1,600 மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை மதிப்பீடுகள் சுட்டிக் காட்டுகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இதற்கான முன்னேற்றம் வலுவான நிலையில் இருந்தாலும், தென்கிழக்கு ஆசியா அடுத்த தசாப்தங்களில் விமானப் பயணத்துக்கான முக்கிய மையமாகத் திகழும். இந்த பிராந்தியத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்று செயல்படுவதற்கு சிங்கப்பூர் சிறந்த நிலையில் உள்ளது.

ஒட்டுமொத்த அளவில் உலகம் ஜீரோ கார்பன் உமிழ்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் சிங்கப்பூரின் இந்த நடவடிக்கை அந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு மிகவும் உதவும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in