Published : 26 Jul 2023 12:06 AM
Last Updated : 26 Jul 2023 12:06 AM

மதம் மாறிய பின் பாகிஸ்தான் நண்பரை மணந்தார் இந்திய பெண் அஞ்சு

பெஷாவர்: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவை திருமணம் முடித்துள்ளார். முன்னதாக, தங்களுக்குள் காதல் இல்லை என்று நஸ்ருல்லா தெரிவித்த நிலையில் செவ்வாய் கிழமை இவர்களது திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டார் என்றும், தற்போது பாத்திமா என்ற புதிய பெயரை வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இருவரின் திருமணம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் சட்டப்படி திருமணம் செய்துகொண்டனர்.

மேல் திர் மாவட்ட மூத்த காவல் அதிகாரி முஹம்மது வஹாப், இந்த திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளதோடு, "நஸ்ருல்லா மற்றும் அஞ்சுவின் திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது, மேலும் அவர் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு முறையான நிக்காஹ் நடத்தப்பட்டது" என்று தெரிவித்துள்ளார். இருவரும் திருமணத்துக்கு எடுத்துள்ள வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, திருமணம் தொடர்பாக பேசியுள்ள அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ், "இரண்டு குழந்தைகளையும், கணவனையும் விட்டுவிட்டு அஞ்சு ஓடிய விதம் கவலை அளிக்கிறது. தன் குழந்தைகளை நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதை செய்ய வேண்டுமானால் முதலில் தன் கணவனை விவாகரத்து செய்திருக்க வேண்டும். தனது குழந்தைகள் மற்றும் கணவரின் எதிர்காலத்தை அவள் அழித்துவிட்டாள். எங்களை பொறுத்தவரை அஞ்சு இனி உயிருடன் இல்லை" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கைலோர் கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதாகும் அஞ்சு. இவர், பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா என்ற 29 வயது இளைஞரோடு கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசித்து வந்த அஞ்சு, 30 நாட்கள் பாகிஸ்தானில் தங்குவதற்கான விசா பெற்று அந்நாட்டுக்குச் சென்றார்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தில் உள்ள குல்ஷோ என்ற கிராமத்தில் வசித்து வரும் நஸ்ருல்லாவை, அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்த அஞ்சு தற்போது நஸ்ருல்லாவின் வீட்டில் தங்கி இருக்கிறார். இந்தியாவில் இருந்து இளம்பெண் ஒருவர் வந்திருப்பது குறித்த தகவல் பரவியதால், பாகிஸ்தான் ஊடகங்கள் அது குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. இருவரும் காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிய நிலையில் திருமணம் முடிந்துள்ளது.

ராஜஸ்தானில் வசித்து வந்த அஞ்சு - அர்விந்த் தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x