Published : 01 Nov 2017 09:47 AM
Last Updated : 01 Nov 2017 09:47 AM

தேசிய கீதத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை: சீன அரசு பரிசீலனை

சீனாவில் தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க அந்நாட்டு நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.

கவிஞர் தியான் ஹன் இயற்றி, இசையமைப்பாளர் ‘நீ எர்’ இசையமைத்த ‘March of the Volunteers’ என்ற பாடல் சீனாவின் தேசிய கீதமாக ஏற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் சீன நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தில், இச்சட்டத்தில் திருத்தம் செய்வற்கான மசோதா உறுப்பினர்களின் பரிசீலனைக்கு நிலைக்குழுவால் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேறினால், தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் மற்றும் நிறைவு பெறும் நேரம், அரசியல் சாசன பதவி ஏற்பு விழாக்கள், தேசியக் கொடியேற்று விழா, முக்கிய விழாக்கள், விருது வழங்கும் விழா, தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகள், தூதரக நிகழ்ச்சிகள், விளையாட்டு விழாக்கள் மற்றும் பிற பொருத்தமான தருணங்களில் மட்டும் தேசிய கீதம் பாடலாம்.

துக்க நிகழ்ச்சிகள், பொருத்தமற்ற தனியார், வர்த்தக நிகழ்ச்சிகளில் இதை பாடுவதோ அல்லது பொது இடங்களில் இதன் பின்னணி இசை இசைப்பதோ சட்ட விரோதம் ஆகும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்களில் தேசிய கீதம் சேர்க்கப்பட உள்ளது. பொருத்தமான நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் தேசிய கீதத்தை பாடுவதற்கு ஊக்குவிக்கப்பட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x