Published : 14 Nov 2017 09:48 AM
Last Updated : 14 Nov 2017 09:48 AM

பிலிப்பைன்ஸில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி சந்திப்பு: பாதுகாப்பு, வர்த்தக உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை

பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தக உறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஆசியான் அமைப்பின் 31-வது உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் மணிலா சென்றார்.

இந்த உச்சி மாநாட்டுக்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தனியாக சந்தித்துப் பேசினர். அப்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது. இதன்மூலம், ஆசிய பிராந்தியத்தின் சிறந்த எதிர்காலம் மற்றும் உலக மக்களின் நலனுக்காக இரு நாடுகளும் இணைந்து பாடுபட முடியும்.

சமீப காலமாக ட்ரம்ப் பயணம் செய்யும் நாடுகளில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவைப் பற்றி பெருமையாக பேசி வருகிறார். அதேநேரம், அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடிந்தவரை இந்தியா முயற்சிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடியை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஏற்கெனவே சந்தித்துப் பேசி உள்ளேன். அவர் எனது சிறந்த நண்பராகிவிட்டார். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்” என்றார்.

ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு நிலவரம், இருதரப்பு வர்த்தக உறவை பலப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர்.

தென் சீனக் கடல் பகுதிக்கு சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன், இந்தியப் பெருங்கடலிலும் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்காக, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளும் இணைந்து ‘குவாட்’ என்ற புதிய அணி நேற்று முன்தினம் உதயமானது. இந்நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை வியட்நாம் சென்றிருந்த ட்ரம்ப், டனாங் நகரில் நடந்த ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, “இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சியில் இந்தியாவும் முக்கிய பங்கு வகிக்கிறது” என்றார். அதாவது சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கவே ஆசியா-பசிபிக் என்பதற்கு பதில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் என அவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர் லாஸ் பனோஸ் நகரில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை (ஐஆர்ஆர்ஐ) பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அங்கு தனது பெயர் சூட்டப்பட்ட (ஸ்ரீ நரேந்திர மோடி ரெசிலியன்ட் ரைஸ் பீல்டு லெபாரட்டரி) நெல் உற்பத்தி ஆய்வகத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிலிப்பைன்ஸில் வசிக்கும் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x