Published : 18 Nov 2017 05:17 PM
Last Updated : 18 Nov 2017 05:17 PM

ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் உறவினர்கள் வெளிநாடு செல்ல விரைவில் தடை?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபின் நெருங்கிய உறவினர்கள் மீதும் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

பாகிஸ்தானில் பனாமா கேட் ஊழல் விவகாரத்தில், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் நவாஸ் பதவி விலகினார். அவர் மீதான ஊழல் வழக்குகளை பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

நவாஸின் மனைவி கல்சூம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரிட்டன் தலைநகர் லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவியாக, நவாஸும் அங்கேயே தங்கியுள்ளார்.

, நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான இரண்டு ஊழல் வழக்குகளில் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நவாஸ் ஷெரீப் மட்டுமின்றி அவரது இருமகன்களான ஹூசேன் மற்றும் ஹசன், மகள் மரியம், மருமகன் முகமது சப்தர் ஆகியோர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர்களிடம் விசாரணையும் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நவாஸ் ஷெரீபின் குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என தெரிகிறது.

இதுதொடர்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டான்’ பத்திரிக்கை கூறியுள்ளதாவது:

‘‘நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது ஏற்கனவே கடுமையான குற்றச்சாட்டுக்களை ஊழல் கண்காணிப்பு அமைப்பு சுமத்தியுள்ளது. வழக்குகளை விசாரித்து வரும் தேசிய பொறுப்புடமை அமைப்பு, அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகளுக்கு அவர்கள் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் விரைவில் உத்தரவு பிறபிக்க உள்ளது. லாகூரில் உள்ள தேசிய பொறுப்புடமை அமைப்பின் அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது’’ எனக் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x