Published : 18 Nov 2017 09:39 AM
Last Updated : 18 Nov 2017 09:39 AM

அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.45 லட்சம் கோடி ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நிறைவேற்றம்

அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ராணுவத்துக்கு ரூ.45 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட் 2018 செனட் சபையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டுக்கு ஆதரவாக 356 பேர் வாக்களித்தனர். 70 பேர் எதிராக வாக்களித்தனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 127 எம்.பி.க்கள் பட்ஜெட்டுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு ரூ.45,51,050 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்க பட்ஜெட்டில் பாகிஸ்தான் அரசுக்கு நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி 2018 பட்ஜெட்டில் ரூ.2275 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாத்தை எதிர்த்து போரிடும் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் செயல்பாடு திருப்திகரமாக இருந்தால் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். அமெரிக்கா, இந்தியா இடையிலான பாதுகாப்பு உறவை மேலும் மேம்படுத்த சிறப்பு தூதர் நியமிக்கப்பட வேண்டும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவை குடியரசு கட்சி செனட்டர் டெட் குரூஸ் உட்பட பெரும்பான்மையான தலைவர்கள் வரவேற் றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x