

தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியை நிர்வகித்துவரும் பொதுத்துறை ஒளிபரப்பு அமைப்பான பிரசார் பாரதிக்கு நிதி மற்றும் நிர்வாக ரீதியாக கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஜவஹர் சர்க்கார் கூறினார்.
ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற சர்வதேச ஊடக கருத்தரங்கில் பிரசார் பாரதி தலைமைச் செயல் அதிகாரி ஜவஹர் சர்க்கார் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டி: “பிரசார் பாரதிக்கு கூடுதல் நிதியும், நிர்வாக ரீதியான தன்னாட்சியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு அறியும். அது தொடர்பாக இங்கு விவாதிக்க நான் விரும்பவில்லை. தொழில்முறை ரீதியிலான தன்னாட்சி தொடர்பான எனது நிலையை ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
பிரசார் பாரதி அமைப்பு, அரசுக்கு ஆதரவாகவும் இல்லை; எதிர்ப்பாகவும் செயல்படவில்லை. தனக்கு வரும் உண்மைத் தகவல் களை அப்படியே ஒளிபரப்பி வருகிறது. நாடாளுமன்றத் தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, அது தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
எனினும், அதில் பணியாற்றும் அனைவரும் அரசு ஊழியர்கள் என்பதால், இந்த அமைப்பை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகவே மக்கள் பார்க்கின்ற னர். பிரசார் பாரதியின் ஒளிபரப்புச் சேவையை விரிவுபடுத்தி ஐரோப்பிய சந்தைக்குள் நுழைவதற் கான வாய்ப்பை ஆய்வு செய்து வருகிறோம். நமது நாட்டின் கருத்தை பிற நாடுகளுக்குத் தெரி யப்படுத்தும் விதமாக இந்நட வடிக்கை அமையும்” என்றார்.