Published : 15 Nov 2017 09:13 AM
Last Updated : 15 Nov 2017 09:13 AM

ஆசியான் உச்சி மாநாட்டில்: உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசினார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசியான் அமைப்பின் 31-வது உச்சி மாநாடு கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக இந்தியா - ஆசியான், கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாடும் நடைபெற்றன. இந்த மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை பிரதமர் மோடி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், வியட்நாம் பிரதமர் நிகுயென் சூவான் புக், புரூனே சுல்தான் ஹசனல் போல்கியா, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், சீன பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை பிரதமர் மோடி நேற்று தனித்தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

ஆசியான் கூட்டமைப்பில் உள்ள பெரும்பாலான நாடுகள், தென்சீனக் கடல் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக உள்ளன. மேலும் தென்சீனக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகியவை இணைந்து ‘குவாட்’ என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இந்த 4 நாடுகளின் தலைவர்களும் மாநாட்டில் அதிகாரபூர்வமற்ற வகையில் சந்தித்துப் பேசினர். அப்போது கடல்சார் பாதுகாப்பில் சீனாவுக்கு எதிராக காய் நகர்த்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.

தென்சீனக் கடல் பிரச்சினை தவிர்த்து, மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் விவகாரத்தை மலேசியா, கனடா உள்ளிட்ட நாடுகள் எழுப்பின. மாநாட்டில் கலந்துகொண்ட மியான்மர் மூத்த தலைவர் ஆங் சான் சூச்சியிடம் அகதிகள் பிரச்சினை குறித்து உலக தலைவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

ஆசியான் மாநாட்டின் ஒரு பகுதியாக மணிலாவில் நேற்று கிழக்காசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் மாநாடு தொடங்க 2 மணி நேரம் தாமதமான நிலையில் அதிபர் ட்ரம்ப் நேற்றே அமெரிக்காவுக்கு புறப்பட்டார். எனினும் பிரதமர் நரேந்திர மோடி, இதர தலைவர்கள் கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x