Published : 22 Nov 2017 09:22 AM
Last Updated : 22 Nov 2017 09:22 AM

ஐ.நா. சபையில் நடந்த 12-வது சுற்று வாக்கெடுப்பில் ஐ.நா. நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் பண்டாரி தேர்வு

ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார்.

ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்படுகிறது. இந்த நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அதன்படி சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட 193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொது சபையில் 97 வாக்குகளும், 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 8 வாக்குகளும் பெற வேண்டும். அண்மையில் சர்வதேச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஐ.நா. சபையில் நடைபெற்றது. இதில் லெபனானை சேர்ந்த நவாப் சலாம், பிரான்ஸை சேர்ந்த ரோனி ஆபிரகாம், சோமாலியாவை சேர்ந்த அப்துல்குவாவி அகமது யூசூப், பிரேசிலை சேர்ந்த அந்தோனியோ அகஸ்டோ கன்காடோ திரின்டேடி ஆகிய 4 நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஐந்தாவது நீதிபதி பதவிக்கு இந்தியாவைச் சேர்ந்த தல்வீர் பண்டாரி, பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கிரீன்வுட் இடையே கடும் போட்டி நிலவியது. இருவருமே சர்வதேச நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பதவிக் காலம் வரும் 2018 பிப்ரவரியில் நிறைவடைகிறது.

ஐ.நா. சபை தேர்தல் வாக்கெடுப்புகளில் ஆரம்பம் முதலே பொது சபையில் இந்தியாவுக்கும் பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டனுக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்து வந்தன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடித்தது. கடைசியாக நடந்த 11-வது சுற்று வாக்கெடுப்பின்போது பொது சபையில் தல்வீர் பண்டாரிக்கு 121 வாக்குகளும் கிறிஸ்டோபர் கிரீன்வுட்டுக்கு 68 வாக்குகளும் கிடைத்தன. அதேநேரம் பாதுகாப்பு கவுன்சிலில் தல்வீருக்கு 5 வாக்குகளும் கிறிஸ்டோபருக்கு 9 வாக்குகளும் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை 12-வது சுற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு தொடங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு போட்டியில் இருந்து விலகி கொள்வதாக பிரிட்டன் திடீரென அறிவித்தது. தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் ஐ.நா. பொது சபையில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரிக்கு 183 வாக்குகளும் பாதுகாப்பு கவுன்சிலில் 15 வாக்குகளும் கிடைத்தன. சர்வதேச நீதிமன்ற நீதிபதியின் பதவிக் காலம் 9 ஆண்டுகளாகும். அதன்படி வரும் 2027 வரை தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிபதியாக பதவி வகிப்பார்.

கடந்த 1946-ல் சர்வதேச நீதிமன்றம் தொடங்கப்பட்டது. அன்றுமுதல் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் அந்த நீதிமன்றத்தில் அங்கம் வகித்து வந்தார். 71 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச நீதிமன்ற நீதிபதி பதவியை அந்த நாடு இழந்திருக்கிறது.

பிரதமர் மோடி பாராட்டு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தல்வீர் பண்டாரிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இது இந்தியர்களுக்கு பெருமிதமான தருணம். இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்த ஐ.நா. பொது சபை உறுப்பினர்களுக்கும், பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன். தல்வீர் பண்டாரியின் வெற்றிக்காக உழைத்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில், “வந்தே மாதரம்- சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது-ஜெய்ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சயீது அக்பருதீன் தனது ட்விட்டர் பதிவில், “தல்வீர் பண்டாரியின் தேர்வு 100 கோடி இந்தியர்களின் உள்ளங்களை பூரிப்படைய செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் தோற்றது ஏன்?

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் அந்த நாடு இந்தியாவிடம் தோற்றிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

தேர்தலில் விலகியது குறித்து ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதர் மேத்யூ ரைகிராப்ட் கூறியதாவது: ஐ.நா. சபையின் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே தேர்தலில் இருந்து விலகிவிட்டோம். இது மிகுந்த வருத்தமளிக்கிறது. எனினும் எங்களது நெருங்கிய நட்பு நாடான இந்தியா வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. ஐ.நா. சபையிலும் சர்வதேச விவகாரங்களிலும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐ.நா.வின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுக்கு பொது சபையில் ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. அண்மைகாலமாக ‘குரூப் 77’ என்றழைக்கப்படும் வளரும் நாடுகள் ஐ.நா. சபையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. இதன்காரணமாக எவ்வளவோ போராடியும் பொதுசபையில் பிரிட்டனுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியதும் அந்த நாட்டுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பத்ம பூஷண் விருது பெற்றவர்

 ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் தல்வீர் பண்டாரி சட்டம் பயின்றார். குறுகிய காலத்திலேயே தந்தை மகாவீர் சந்த் பண்டாரி, தாத்தா பி.சி. பண்டாரி போல மிகச் சிறந்த வழக்கறிஞராக உருவெடுத்தார். கடந்த 1968 முதல் 1970 வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார் கடந்த 1970-ல் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பயிற்சி பட்டறையில் பங்கேற்றார். பின்னர் சிகாகோவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப்படிப்பை முடித்தார்.

பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் சட்ட நிபுணராக பணியாற்றினார். கடந்த 1991-ல் அவர் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2004-ல் பாம்பே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் 2005-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து சட்ட வகுப்புகளை எடுத்துள்ளார். கடந்த 2010-ல் கர்நாடக பல்கலைக்கழகமும், 2013-ல் தேசிய சட்ட பல்கலைக்கழகமும் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. இவை தவிர மேலும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளன. கடந்த 2014-ல் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x