இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் அமைச்சர் ராஜினாமா

இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் அமைச்சர் ராஜினாமா
Updated on
1 min read

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் அமைச்சர் பிரீத்தி படேல் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரிட்டனில் பிரதமர் தெரசா மே தலைமையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அவரது அரசில் கடந்த 2016 ஜூனில் சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி படேல் பொறுப்பேற்றார். இதன்மூலம் பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி கேபினட் அமைச்சர் என்ற பெருமையை பெற்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் குடும்பத்துடன் இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட 12-க்கும் அரசியல் தலைவர்களை ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்புகள் குறித்து பிரதமருக்கோ, வெளியுறவுத் துறைக்கோ தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் கேபினட் அமைச்சருக்குரிய ஒழுங்குவிதிகளை பிரீத்தி படேல் மீறியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த புதன்கிழமை பிரதமர் தெரசா மேவை, அமைச்சர் பிரீத்தி படேல் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளித்தார்.

இந்த விவகாரம் குறித்து இஸ்ரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “இஸ்ரேலிய பயணம், சந்திப்புகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் அமைச்சர் பிரீத்தி சிங் தெரிவித்திருந்தார். ஆனால் இஸ்ரேலிய தலைவர்களை சந்தித்த தகவல்களை வெளியிட வேண்டாம் என்று பிரதமர் அலுவலகம்தான் பிரீத்தி சிங்கை அறிவுறுத்தியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெண் நிருபருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டின்பேரில் பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் பலோன் சில நாட்களுக்கு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பிரீத்தி படேல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒரே வாரத்தில் இரு அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர்.

இதனிடையே, ஈரானில் பிரிட்டிஷ் குடிமகன் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் தவறான தகவல்களை அளித்த வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சனும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன. இதனால் பிரதமர் தெரசா மேவுக்கு நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது. அவர் விரைவில் தனது அமைச்சரவையை மாற்றி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in