Published : 19 Jul 2023 07:18 AM
Last Updated : 19 Jul 2023 07:18 AM
துபாய்: ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் மிகவும் எளிமையானவர் என்று இந்திய தொழிலதிபர் அனாஸ் ரஹ்மான் ஜுனைத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் குறித்து அனாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
நான் ஹுருன் இந்தியா என்ற நிறுவனத்தை துபாயில் தொடங்கி நடத்தி வருகிறேன். அண்மையில் துபாயில் விடுமுறையைக் கொண்டாட எனது குடும்பத்தாருடன் சென்றிருந்தேன்.
லிப்டில் பிரதமர்: துபாயிலுள்ள அட்லாண்டிஸ்தி ராயல் ஓட்டலின் 22-வது மாடிக்கு லிப்டில் சென்றபோது, பிரதமர் ஷேக் முகமது பின்ரஷித்தை சந்தித்தேன். அப்போது அவருடன் நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
துபாயின் உயரிய பதவியில் இருக்கும் அவர் மிகவும் எளிமையான மனிதராக இருந்தார். புகைப்படங்கள் எடுக்க நேரமானாலும் மிகவும் பொறுமையுடன் அவர் எங்களுக்காகக் காத்திருந்தார்.
எனது குடும்பத்தாருடன் அவர் பேசி மகிழ்ந்தார். அவர் மிகவும் எளிமையாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எங்கள் குடும்பத்தாருடன் நட்புடன் பழகினார். மேலும் எனது மகளின் தோளின் மீது கை போட்டு என்னை யார் என்று தெரியுமா என்று கேட்டார். சிறிது நேரம் எங்களுடன் பேசிவிட்டு புறப்பட்டார். வழக்கமாக நாங்கள் எடுக்கும் எந்தப் புகைப்படத்திலும் எனது மகன் சிரிக்கவே மாட்டான்.ஆனால் அவருடன் எடுத்த புகைப்படங்களில் அவன் அதிகமாக சிரித்துக் கொண்டிருந்தான்.
அவருடன் எடுத்த புகைப்படங்களை எனது நண்பர்களுக்கும், பள்ளித் தோழர்களுக்கும், வாட்ஸ்-அப் குரூப்பிலும் அனுப்பினேன். நாங்கள் சென்ற லிப்ட்டை புகைப்படம் எடுத்த எனது மனைவி, எனக்குப் பிடித்தமான லிப்ட் என்று எழுதி சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இவ்வாறு ட்விட்டர் பக்கத்தில் அனாஸ் கூறியுள்ளார். இந்தச் செய்தி துபாயில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில் வெளி வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT