

அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் கடற்படையும் கூட்டாக இணைந்து வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஒரு வார காலத்துக்கு போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து தங்கள் கடற்படையை பலப்படுத்திக் கொள்வதற்காக ஆண்டுதோறும் இத்தகைய பயிற்சியை நடத்துவது வழக்கம். 2007-ம் ஆண்டுக்குப்பின் இப்பயிற்சியில் ஜப்பான் கலந்து கொள்வது இது மூன்றாவது முறையாகும்.
ஜப்பானுக்கு தெற்கே உள்ள செசபோ கடற்படை தளத்தில் இந்தப் பயிற்சிக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மலபார் பயிற்சி என்று அழைக்கப்படும் இது 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும்.“இப்பயிற்சியில் ஐஎன்எஸ் ரன்விஜய், ஷிவாலிக், ஐஎன்எஸ் சக்தி ஆகிய 3 இந்திய போர்க் கப்பல்களும் 700 முதல் 800 வீரர்களும் ஈடுபடுவார்கள். கடற்கொள்ளை, தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிப்பது ஆகியவை குறித்து பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்” என இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் டிகே சர்மா தெரிவித்தார்.
இதுபோல, அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்குமே சீனாவுடன் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. அத்துடன் தெற்கு சீன கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் விவகாரத்தில் சீனாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே பிரச்சினை நீடிக்கிறது.
இவ்வாறு ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா தனது கவனத்தை ஆசியாவின் பக்கம் திருப்ப முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
சீனாவுக்கு எதிரானது அல்ல
இதற்கிடையே, “இந்த வருடாந்திர கடற்படை போர் பயிற்சி வழக்கமானதுதான். சீனாவுக்கு எதிரானது அல்ல. இதற்கும் சீனாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை” என அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.