பாகிஸ்தானுக்கு மேலும் 600 மில்லியன் டாலர் கடன் வழங்கியது சீனா

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு சீனா மேலும் 600 மில்லியன் டாலர் கடன் வழங்கி உள்ளது. இதனை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பிரதமரின் இளைஞர் விளையாட்டு முன்முயற்சியை அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் இன்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "சீனாவின் எக்ஸிம் வங்கி வழங்கிய கடன் காரணமாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 600 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

நமது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. கடன் மூலமாக அல்லாமல், வருமானத்தைப் பெருக்குவதன் மூலம் இதை சாதிக்க விரும்புகிறோம். விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம், தொழில் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் பாகிஸ்தான் இளைஞர்கள் சிறந்து விளங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதால் இது சாத்தியமாகும்.

விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்பாடுகள் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். அதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன். விளையாட்டை மேம்படுத்துவதற்காக பட்ஜெட்டில் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு வாய்ப்பு அளிக்கப்பட்டால், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீட்டை எங்கள் கட்சி வழங்கும்" என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, கடந்த மூன்று மாதங்களில் அந்நாட்டுக்கு 5 பில்லியன் டாலர்களுக்கு மேல் கடன் அளித்துள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதனை கடந்த வாரம் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர் வழங்க கடந்த ஜூன் 30ம் தேதி ஒப்புதல் அளித்தது. அதில், 1.2 பில்லியன் டாலர் தொகையை முதல் தவணையாக வழங்கி உள்ளது. அதோடு, சவூதி அரேபியாவிடம் இருந்து 2 பில்லியன் டாலர், ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து ஒரு பில்லியன் டாலர் தொகையை பாகிஸ்தான் கடனாகப் பெற்றுள்ளது.

இவற்றின் காரணமாக பாகிஸ்தானில் பணப் பற்றாக்குறை அளவு குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 334 மில்லியன் டாலர் தொகை உபரியாக இருப்பதாக பாகிஸ்தான் அரசு வங்கி அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in