Published : 04 Nov 2017 10:38 AM
Last Updated : 04 Nov 2017 10:38 AM

தென்கொரியா, ஜப்பானுடன் இணைந்து அமெரிக்க போர் விமானங்கள் கொரிய பகுதியில் தீவிர பயிற்சி

வடகொரியா தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அமெரிக்க போர் விமானங்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டன.

சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. தென்கொரியாவையும் அதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவையும் தரைமட்டமாக்கி விடுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், வடகொரிய அச்சுறுத்தலை சமாளிக்க, தென்கொரியா, ஜப்பான், அமெரிக்க விமானப் படை வீரர்கள் கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் அடுத்தகட்டமாக சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தக் கூடிய அமெரிக்க போர் விமானங்கள் நேற்று கொரிய தீபகற்ப பகுதியில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டன. இந்த பயிற்சியில் தென்கொரியா மற்றும் ஜப்பான் போர் விமானங்களும் பங்கேற்றன என்று அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியில் வெடிகுண்டுகள் வீசம் சூப்பர்சானிக் பி-1பி ரக அதிநவீன 2 போர் விமானங்கள் ஈடுபட்டன. குவாம் தீவில் உள்ள தளத்தில் இருந்து 2 விமானங்களும் கிளம்பி கொரிய கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டன. எங்களுடன் தென்கொரியா மற்றும் ஜப்பான் விமானங்களும் சேர்ந்து கொண்டன என்று அமெரிக்க பசிபிக் விமானப் படை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆசிய நாடுகள் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார். இந்நிலையில், கொரிய பகுதியில் போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை கூறும்போது, ‘‘அதிபர் ட்ரம்ப் 5 ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது வடகொரியாவின் மிரட்டல் குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் விரிவாக ஆலாசனை நடத்துவார்’’ என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர்.மெக்மாஸ்டர் கூறும்போது, ‘‘தீவிரவாதத்தை ஆதரிக்கும், தூண்டிவிடும் நாடாக வடகொரியாவை அமெரிக்கா விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த விஷயம் குறித்து பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x