Published : 08 Nov 2017 08:50 AM
Last Updated : 08 Nov 2017 08:50 AM

இந்தியாவுடன் போரிடும் எண்ணமில்லை: பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி கருத்து

இந்தியாவுடன் போரிடும் எண்ணமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி கூறினார்.

பிரிட்டனில் புகழ்பெற்ற ‘லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்’ கல்லூரியில் ‘பாகிஸ்தானின் எதிர்காலம் -2017’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி பங்கேற்றார்.

அவர் பேசும்போது, “காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படும் வரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு பதற்றமாகவே இருக்கும். என்றாலும் இப்பிரச்சினைக்கு போர் தீர்வாகாது. இந்தியாவுடன் போரிடும் எண்ணமில்லை. ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லை. சுதந்திர காஷ்மீர் கோரிக்கைக்கு ஆதரவு இல்லை. காஷ்மீர் பிரச்சினையை பொறுத்தவரை பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வது மட்டுமே தற்போதுள்ள வழியாகும்” என்றார்.

இந்த கருத்தரங்கில் அப்பாஸி சுமார் 35 நிமிடம் பேசினார். ஆப்கானிஸ்தான் விவகாரம், பாகிஸ்தானில் அரசு - ராணுவம் இடையிலான உறவு, நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம், இந்தியாவுடனான உறவு, காஷ்மீர் பிரச்சினை என பல்வேறு விவகாரங்கள் குறித்து பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

பாகிஸ்தானில் உள்நாட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான போர் குறித்து அப்பாஸி கூறும்போது, “தீவிரவாதிகளுக்கு எதிரான மிகப் பெரிய போரை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் 4-ல் 1 பங்கு வீரர்கள் இப்பணியில ஈடுபட்டுள்ளனர். இப்போரில் ராணுவம் வெற்றி பெற்று வருகிறது. பாகிஸ்தானில் 5 லட்சம் தானியங்கி துப்பாக்கிகள் தனி நபர்கள் வசம் உள்ளன. இவற்றை பறிப்பதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம். கடந்த இடைக்கால அரசு 35 ஆயிரம் தானியங்கி துப்பாக்கிளை தனி நபர்களுக்கு வழங்கியது” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “ஆப்கானிஸ்தான் விவகாரத்தை மட்டுமே கொண்டு அமெரிக்கா - பாகிஸ்தான் உறவை வரையறுக்கக் கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x