Published : 14 Jul 2023 04:07 AM
Last Updated : 14 Jul 2023 04:07 AM

பிரான்ஸில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு - 26 ரஃபேல் போர் விமானம் வாங்க ஒப்புதல்

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன், விமான நிலையத்துக்கு வந்து மோடியை வரவேற்றார்.படம்: பிடிஐ

பாரிஸ்: அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைநகர் பாரிஸில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸிடம் இருந்து
26 ரஃபேல்-எம் போர் விமானங்கள் வாங்குவது, மும்பையில் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க இந்திய ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, ரூ.90,000 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவது வழக்கம். கடந்த 2009-ல் அன்றைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இந்த விழாவில் பங்கேற்றார். இந்நிலையில், இன்று நடைபெறும் பிரான்ஸ் தேசிய தினவிழாவில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பின்பேரில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். விழா அணிவகுப்பில், இந்திய முப்படைகளின் 269 அதிகாரிகள், வீரர்கள் பங்கேற்கின்றனர்.

பிரான்ஸிடம் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களும் பிரான்ஸ் விமானப் படையுடன் இணைந்து சாகசங்களில் ஈடுபட உள்ளன. இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்பல், பிரான்ஸின் பிரெஸ்ட் நகரில் உள்ள கடற்படை தளத்தில் முகாமிட்டுள்ளது. அங்கு நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின விழாவில் ‘ஐஎன்எஸ் சென்னை’ போர்க் கப்பலும் பங்கேற்க உள்ளது.

பிரதமருக்கு சிறப்பு விருந்து: இந்நிலையில், பாரிஸ் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன், விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்று அழைத்துச் சென்றார். ஏராளமான இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து மோடியை வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து, பாரிஸில் இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். பின்னர், பாரிஸில் உள்ள அதிபர் மாளிகையான எலிசி அரண்மனையில் மோடிக்கு அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று இரவு சிறப்பு விருந்து அளித்தார்.

பாரிஸில் இன்று நடைபெறும் பிரம்மாண்ட தேசிய தின விழாவில் இரு தலைவர்களும் பங்கேற்கின்றனர். பிறகு, அதிகாரப்பூர்வமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

ரஃபேல் விமானங்கள்: இதற்கிடையே, டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ராணுவ கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் நேற்று நடந்தது. இதில், இந்திய கடற்படைக்காக பிரான்ஸிடம் இருந்து 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. ‘தற்போது வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் ஸ்கார்பீன் நீர்மூழ்கிகளின் ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.90,000 கோடியாக இருக்கும்’ என்று இந்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிநவீன ஏவுகணைகள்: இந்திய கடற்படைக்காக பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிகளை மும்பையில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இத்துடன் அதிநவீன ஸ்கால்ப் ஏவுகணைகளையும் இந்தியாவுக்கு பிரான்ஸ் வழங்க உள்ளது. நீர்மூழ்கியில் இருந்து ஏவும்போது 1,000 கி.மீ. வரையிலும், போர்க் கப்பலில் இருந்து ஏவும்போது 1,400 கி.மீ. வரையிலும் இது பாய்ந்து செல்லும். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில், இந்தியாவிலேயே இவை தயாரிக்கப்படும் என்று பிரான்ஸ் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x