

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜகார்த்தா ஆளுநர் ஜோகோ விடோடோ வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜோகோவை எதிர்த்து முன்னாள் ராணுவ ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ போட்டியிட்டார். யார் யாருக்கு எவ்வளவு வாக்கு கிடைத்திருக்கும் என்கிற அதிகாரபூர்வமற்ற கணிப்பை தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.அதன்படி ஜோகோ 53 சதவீத வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். பிரபோவோ 47 சதவீத வாக்குகள் பெற்றிருக்கிறார். இந்த கணிப்பு பற்றி பிரபோவோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
விடோடோ வெற்றி பெற்றால் தலைமைப்பதவியில் அமர்ந்து ஜனநாயகத்தை வலுப்படுத்தி புதிய மாற்றம் கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண குடும்பப் பின்னணி கொண்ட விடோடோ, மர வேலைப்பாட்டு பொருள்கள் ஏற்றுமதியாளராக இருந்தார்.முன்னாள் சர்வாதிகாரி சுகார்த்தோவின் மருமகனான பிரபோவோ ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சர்வாதிகாரம் தலைதூக்கும் என விமர்சகர்கள் கருதுகின்றனர்.