விதிகளை மீறி ஏரி அமைத்த நெய்மருக்கு ரூ.28.6 கோடி அபராதம் விதித்த பிரேசில் அரசு

நெய்மர் | கோப்புப்படம்
நெய்மர் | கோப்புப்படம்
Updated on
1 min read

பிரேசிலியா: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் பிரேசில் நாட்டை சேர்ந்த நெய்மர். அவர் தனது நாட்டில் தனக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் செயற்கையாக ஏரி அமைத்தபோது சுற்றுச்சூழல் துறையின் முறையான உரிமம் இல்லாமல் விதிகளை மீறியதற்காக ரூ.28.6 கோடி அபராதம் விதித்துள்ளது அந்நாட்டு அரசு.

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தனது கடற்கரையோர சொகுசு பங்களாவில் நெய்மர் ஏரி அமைத்துள்ளார். இந்தப் பணியின்போது நாட்டின் சுற்றுச்சூழல் விதிகளை அவர் மீறியுள்ளார். குறிப்பாக, சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாதது, நதி நீரை மடைமாற்றி சேகரித்தது, நிலத்தை வெட்டியது போன்ற விதிமீறல்களில் அவர் ஈடுபட்டார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தப் பகுதியில் மேற்கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள அரசு தடை விதித்துள்ளது. ஆனால், நெய்மர் அந்த ஏரியில் நீராடியதாகவும், பார்ட்டி செய்ததாகவும் உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, அந்த பங்களா அமைந்துள்ள மங்கராதிபா பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் செயற்கை ஏரி அமைத்ததில் சுற்றுச்சூழல் விதி மீறல்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவருக்கு 3.3 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.28.6 கோடியாகும்.

நெய்மருக்கு வலது கணுக்கால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இந்த அபராதம் தொடர்பாக அவர் சட்ட ரீதியாக முறையிட 20 நாட்கள் அவகாசம் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in