Published : 17 Jul 2014 10:11 PM
Last Updated : 17 Jul 2014 10:11 PM

உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல்: 295 பேர் பலி

295 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 280 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர்.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில்தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டனர் என்று உக்ரைன் அரசுத் தரப்பு கூறியுள்ளது.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு போயிங் 777 விமானம் சென்று கொண்டிருந்தது. கிழக்கு உக்ரைன் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை மூலம் விமானம் வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ‘புக்’ ஏவுகலத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது. இது 22 ஆயிரம் மீட்டர் உயரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறனுடையது.

10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மறைந்துவிட்டது என்றும் உக்ரைன் கூறியுள்ளது.

விமானம் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ரஷ்ய வான் எல்லைக்குள் நுழையவில்லை என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் அரசு ஐரோப்பிய நாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பனிப் போர் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பேருடன் மாயமானது. பல்வேறு கடல் பகுதியில் விமானத்தை தேடியும் இதுவரை விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த துயர சம்பவம் நிகழ்ந்து சுமார் 4 மாதங்களுக்குள் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது.

பரஸ்பரம் குற்றச்சாட்டு

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக உக்ரைன் அரசும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர். உக்ரைனை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கிளர்ச்சியாளர் படைகளின் தலைவர் அலெக்சாண்டர் போரோடாய் இது தொடர்பாக கூறும்போது, “மலேசிய விமானம் உக்ரைன் எல்லையில்தான் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

எனவே உக்ரைன் ராணுவம்தான் விமானத்தை வீழ்த்தியுள்ளது என்பது உறுதி” என்றார்.

அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்தி போராடி வரும் கிளர்ச்சியாளர்கள்தான் விமானத்தை வீழ்த்தியுள்ளனர். உக்ரைன் ராணுவம் இந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று உக்ரைன் அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

மலேசிய பிரதமர் அதிர்ச்சி

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது கடும் அதிர்ச்சி அளிப்பதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எம்.எச்.17-க்கு பின்னால் வந்த மோடி விமானம்:

உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் அதே வான்வழியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வந்துள்ளது. >(உக்ரைனில் எம்.எச்.17-க்கு சற்றே பின்னால் பறந்து வந்த மோடி விமானம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x