

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற ஆலோசனை குறித்தும் கூட்டறிக்கை குறித்தும் இந்திய வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ரா வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: "வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட அதிகாரபூர்வ வரவேற்பை அடுத்து, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வது குறித்தே அவர்கள் அதிகம் பேசினார்கள். இதன்மூலம், 20-25 தொழில்நுட்ப அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது குறித்து கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் மிக முக்கிய பலன் இது.
சர்வதேச அளவிலான சவால்கள் குறித்தும், அவற்றை இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறு இணைந்து எதிர்கொள்வது என்பது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டார்கள். "அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஆன பின்னரும், இந்தியாவில் மும்பை தாக்குதல் நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும் பயங்கரவாதம் இன்னமும் அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிப்பவர்களும் ஆதரவாக இருப்பவர்களும் சமூகத்தின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கக்கூடியவர்கள் என்பதில் நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. அத்தகையவர்களுக்கு எதிராக அனைவரும் உறுதியாக ஒருங்கிணைய வேண்டும்" என பிரதமர் மோடி தெரிவித்தார்.
"இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா.,வால் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, அல் கய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஹிஜ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியாவும் அமெரிக்காவும் வன்மையாக கண்டிக்கின்றன. தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை பாகிஸ்தான் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 2008-ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமாக இருந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் சட்டப்படி தண்டிக்க வேண்டும்" என இந்திய - அமெரிக்க கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.