

தொழில் பூங்காக்களை அமைப்பது, பிரம்மபுத்திரா நதியில் வெள்ள நீர் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியா சீனா இடையே கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தங்களில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, சீன துணை அதிபர் லீ யுவான்சாவோ ஆகியோர் முன்னிலையில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.
தொழில் பூங்கா தொடர்பான ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளிலும் பரஸ்பரம் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சீன முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதற்கென இருநாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய ஒத்துழைப்பு செயல்பாட்டுக் குழு ஏற்படுத்தப்படும்.
முன்னதாக தொழில் பூங்காக்களை அமைப்பது தொடர்பாக இந்திய தொழில் வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், சீன வர்த்தகத் துறை அமைச்சர் குவோ ஹுசெங் பேச்சு நடத்தினார். சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்வதாகவும், குறைந்த அளவே ஏற்றுமதி செய்வதாகவும், இதனால் ஆண்டுக்கு 3,500 கோடி அமெரிக்க டாலர் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார். சீனாவில் இந்திய பொருள்களை இறக்குமதி செய்ய கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
பிரம்மபுத்திரா நதி நீரில் வெள்ளம் ஏற்படுவது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி வெள்ள அபாயத்திலிருந்து நதியின் கரையோர மக்களை காப்பாற்ற முடியும். ஆண்டுதோறும் மே 15 முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை வெள்ளம் ஏற்படுவது தொடர்பான தகவலை இந்தியாவுக்கு சீனா அளிக்கும்.
மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளின் அதிகாரிகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வகை செய்கிறது. இதன்படி, அதிகாரிகள் நிலையிலான கூட்டங்களை அவ்வப்போது நடத்தி அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் இந்தியாவின் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி, சீன தலைமைத்துவ பயிற்சி மையம் ஆகியவற்றின் இடையேயான ஒத்துழைப்பை அதிகரித்து, இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.