Published : 22 Jun 2023 07:17 AM
Last Updated : 22 Jun 2023 07:17 AM
பனாஜி: ஜனநாயக திருவிழாவான 2024 பொதுத் தேர்தலை காண வாருங்கள் என்று ஜி20 மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
நடப்பு ஆண்டுக்கான ஜி20அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு இந்தியா வழிநடத்தி வருகிறது. அதன்படி நாட்டின்பல்வேறு பகுதிகளில் ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜி20 சுற்றுலா அமைச்சர்களுக்கான மாநாடு கோவா மாநிலத் தலைநகர் பனாஜியில் நேற்று நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் பேசியதாவது:
தீவிரவாதம் நம்மை பிரிக்கிறது, ஆனால் சுற்றுலா நம்மை ஒன்றுபடுத்துகிறது. உண்மையில், சுற்றுலா அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து, இணக்கமான சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இந்தியா பண்டிகைகளின் தேசமாக உள்ளது. நாடு முழுவதும் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கோவாவில், 'சாவ் ஜோவா' திருவிழா விரைவில் நடைபெறவுள்ளது. மேலும் ஜனநாயகத்தின் தாயகமாக விளங்கும் இந்தியாவில் நீங்கள் பார்க்க வேண்டிய 'ஜனநாயகத்தின் திருவிழா' ஒன்று உள்ளது.
அடுத்த ஆண்டு 2024-ல், இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக, ஏறக்குறைய 100 கோடி வாக்காளர்கள் இந்த திருவிழாவைக் கொண்டாடி, ஜனநாயகத்தின் மீது இருக்கும் நிலையான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவார்கள்.
ஜனநாயகத்தின் தாயகம் மற்றும் ஜனநாயகத்தின் திருவிழாவை காண ஜி20 பிரதிநிதிகள் இந்தி யாவுக்கு வரவேண்டும். இந்த ஜனநாயகத் திருவிழாவின்போது 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலா அமைச்சகத்தால் வியத்தகு இந்தியா நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இந்தியாவுக்கு சுற்றுலா வருவது என்பது வெறும் சுற்றிப் பார்ப்பதற்கான நோக்கமாக மட்டுமல்லாமல், அது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT