

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜகார்த்தா நகர ஆளுநரான ஜோகோ விடோடோ வெற்றி பெற்றுள்ளார். ஜோகோவை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக ஜூலை 9-ம் தேதி இந்தோனேஷிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தோனேஷிய உலகின் மூன்றாவது மிகபெரிய ஜனநாயக நாடாகும். தேர்தல் வாக்குப்பதிவின்போது 2 லட்சத்து 50 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஜகார்த்தா நகர ஆளுநரான ஜோகோ விடோடோ, சீர்திருத்தவாதியாவார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ முன்னாள் சர்வாதிகாரி சுகார்த்தோவின் மருமகன் ஆவார். அவர் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் மீண்டும் சர்வாதிகாரம் தலைதூக்கிவிடும் என்ற அச்சம் காரணமாக தேர்தலில் அவரை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
புதிய அதிபர் ஜோகோ நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர். மர வேலைபாட்டுப் பொருள்கள் ஏற்றுமதியாளராக இருந்தார்.எனினும் ஜோகோ எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் உடனடியாக வெளியிடப்பட்டவில்லை.
தேர்தலுக்குப் பிறகு நடந்த கருத்துக் கணிப்புகளில் ஜோகோவுக்கு 53 சதவீத வாக்குகளும் பிரபோவோவுக்கு 47 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அதிபர் பதவியில் உள்ள சுசுலோ பாம்பங் அக்டோபர் மாதம் பதவியில் இருந்து விலகுகிறார். அதன் பிறகு புதிய அதிபர் பதவியேற்பார்.
தேர்தலில் தோல்வியடைந்துள்ள முன்னாள் ராணுவ ஜெனரல் பிரபோவோ, தேர்தலில் முறைகேடுகளும், தில்லுமுல்லுகளும் நடத்திருப்பதாக குற்றம்சாட்டி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவை பிரபோவோ ஏற்றுக் கொள்ளாததால் இந்தோனேசியா முழுவதுமே பதற்றம் ஏற்பட்டுள்ளது.