

இராக்கில் சிறை கைதிகளை அழைத்துச் சென்ற வாகனங்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
இராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள டாஜி நகரில் வியாழக்கிழமை அதிகாலையில் தீவிரவாதிகள் கடும் தாக்குதலை தொடுத்தனர். அங்குள்ள ராணுவ முகாமில் உள்ள சிறையில் தீவிரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையை தீவிரவாதிகள் தகர்க்கக்கூடும் எனக் கருதிய ராணுவ அதிகாரிகள், அங்கிருந்தோர் அனைவரையும் வாகனத்தில் வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
சிறைக் கைதிகளுடன் ராணுவ வாகனங்கள் சென்றபோது, சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். அதோடு, ராணுவ வீரர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 52 சிறைக் கைதிகளும், 8 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். 8 வீரர்கள், 7 கைதிகள் படுகாயமடைந்தனர்.
சிறைக்கைதிகள், ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனரா அல்லது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனரா என்பது பற்றிய தகவல் இல்லை. மேலும், இந்த வாகனங்களின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர்தான் தாக்குதல் நடத்தினார்களா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் இதற்கு முன் பல்வேறு பகுதிகளில் சிறைத் தகர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் பாக்தாதில் உள்ள 2 சிறைகளைத் தகர்த்து 500 கைதிகளை அந்த அமைப்பினர் விடுவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.