Published : 20 Jun 2023 05:22 AM
Last Updated : 20 Jun 2023 05:22 AM
அமிர்தசரஸ்: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் சர்ரே நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலங்களை இணைத்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக உருவாக்க வேண்டும் என்று சீக்கியர்களில் ஒரு பிரிவினர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா மட்டுமன்றி கனடா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் காலிஸ்தான் பிரிவினையை வலியுறுத்தி சீக்கியர்கள் சிலர் போராட்டம், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கனடாவின் சர்ரே நகரில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மர்ம நபர்கள் 2 பேர் அவரை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்ரே நகரில் சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
மேலும் நகரின் குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார். அத்துடன் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் ‘நீதிக்கான சீக்கியர் அமைப்பிலும் ஹர்தீப் சிங் தொடர்பு வைத்திருந்தார்.
இதுகுறித்து இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஹர்சிங்பூரை பூர்வீகமாகக் கொண்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர் பாகிஸ்தானுக்கு கடந்த 2013 - 14-ம் ஆண்டுகளில் சென்று வந்துள்ளார். அங்கு காலிஸ்தான் டைகர் படையைச் சேர்ந்த ஜக்தர் சிங் தாரா என்பவரை சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு பஞ்சாபின் பாட்டியாலாவின் சத்ய நாராயண் கோயிலில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. அந்த வழக்கில் பஞ்சாப் போலீஸார் ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை யார் சுட்டுக் கொன்றது, எதற்காக கொன்றனர் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT