

காஸா மீது இஸ்ரேல் நடத்தும் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என, இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஜோர்டான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜோர்டான் அரசு செய்தித் தொடர்பாளர் முகமது மொமானி கூறியதாவது:
இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலில் ஒருவர் கூட உயிரிழக்காத நிலையில், அத்தாக்குதலைக் காரணம் காட்டி இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 20 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கை கண்டனத்துக்கு உரியது. இத்தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இஸ்ரேல் தனது அனைத்துவிதமான தாக்குதல்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஜோர்டான் வலியுறுத்துகிறது. இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
இஸ்ரேலின் நடவடிக்கை, சர்வதேச சட்டங்களை மீறியதாகும். அப்பிராந்தியத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சி. என்று அவர் தெரிவித்தார். இஸ்ரேல் விமானப்படை காஸா மீது ஒரே இரவில் 160 இடங்களைக் குறிவைத்து குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. காஸாவிலிருந்து டெல் அவிவ் நோக்கி ஏவப்பட்ட 5 சிறிய ஏவுகணைகள் இஸ்ரேல் ராணுவத்தால் வானிலேயே வழிமறித்துத் தகர்க்கப்பட்டன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.