

''ஷெரினுக்கு புரையேறி அவளது உடலில் நாடித் துடிப்பு இல்லாததால் அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்துவிட்டேன்'' என்று கைது செய்யப்பட்ட ஷெரினின் வளர்ப்புத் தந்தை வெஸ்லி மேத்யூ போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இந்தியரான கேரளாவைச் சேர்ந்த வெஸ்லி மேத்யூ என்பவர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தனது வளர்ப்பு மகளான ஷெரின் மேத்யூவைக் (3 வயது) காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார்.
ஷெரின் வளர்ச்சி மற்றும் பேச்சு குறைபாடுடையவர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி ஷெரீன் பால் குடிக்க மறுத்ததால் அவரை அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே விட்டதாகவும் சில மணி நேரம் கழித்துச் சென்று பார்த்தபோது ஷெரினைக் காணவில்லை என்றும் போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெஸ்லி மேத்யூவின் வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள சுரங்கப் பாதையில் சிறுமி ஷெரினின் உடலை அமெரிக்க போலீஸார் கண்டெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து வெஸ்லியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தை அமெரிக்க போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
அதில் வெஸ்லி கூறியிருப்பதாவது, ''வீட்டில் கிடங்கின் உள்ளே பால் குடித்ததற்காக ஷெரினை அடித்தேன். அவள் அதன்பிறகு பால் குடிக்க மறுத்துவிட்டாள். தொடர்ந்து அழுததில் அவளுக்கு புரையேறி விட்டது. அதன்பின்னர் அவளது உடலில் எந்த ஓட்டமும் இல்லை. அதனால் அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்து வீட்டுக்கு அருகிலிருந்த சுரங்கப் பாதையில் அவளது உடலை வைத்து வந்துவிட்டேன்"என்று கூறியுள்ளார்.
பல் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் கண்டெடுத்தது ஷெரின் உடல்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஷெரின் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை.