

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் செலவழித்த கடைசித் தருணங்கள் மனதை உருக்குவதாக உள்ளது.
ஆம்ஸ்டர்டாம் அருகேயுள்ள ஊரில் ஒரு வீட்டில் வசித்து வந்த மிகுவெல் பண்டுவினெட்டா என்ற 11 வயது சிறுவன் மலேசிய விமானத்தில் மறுநாள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறான். முதல் நாள் இரவு தன் அம்மாவிடம், "அம்மா, நான் உன்னைக் கட்டி அணைக்கட்டுமா?" என்று கேட்டுள்ளான்.
தாய் சமீரா கலேஹர் மகனை ஆரத்தழுவிக் கொள்கிறார். சில நாட்களாக அந்தச் சிறுவன் தன் தாயிடம், மரணம், ஆன்மா, கடவுள் என்று நிறைய புதிர்க்கேள்விகளைக் கேட்டபடி இருந்துள்ளான்.
மறுநாள் காலை தாய் சமீரா கலேஹர் மூத்த மகன் (வயது 19) ஷாகாவுடன் தன் மகன் மிகுவெலை விமான நிலையத்தில் மலேசிய விமானத்தில் ஏற்றி வழியனுப்பச் சென்றார். மிகுவெல் தன் மாமாவுடன் பாலியில் உள்ள தனது பாட்டியைப் பார்க்க உற்சாகத்துடன் கிளம்பினான்.
இன்னொரு மகன் மிகா (16) அன்று விமானத்தில் இடம் கிடைக்காததால் மறுநாள் காலை பாலிக்கு செல்ல முடிவெடுக்கப்பட்டது
முதல் நாள் இரவு தன் தாயின் அரவணைப்பிலிருந்து அந்தச் சிறுவன் தன்னை விடுவித்துக் கொள்ள்வில்லை. புதன் இரவு 11 மணியளவில் மிகுவெல், ஷாகா ஆகியோருடன் மற்ற 296 பயணிகளும் விமானத்தில் அமர்கின்றனர். அவர்கள் உயிருடன் இருந்தது அதன் பிறகு 15 மணி நேரங்களே...
கடைசி முத்தம்: மறுமண வாழ்வு முடிந்த சோகம்...
நெதர்லாந்தில் முன்னாள் ராணுவ வீரராக இருந்தவர் வில்லெம் குரூட்ஷால்டன். இவருக்கு வயது 53. இவர் விவாகரத்து செய்யப்பட்டவர். இவர் தனது வீட்டை விற்றுவிட்டு பாலியில் தனது புதிய காதலி கிறிஸ்டினுடன் புதுவாழ்வைத் தொடங்கத் திட்டமிட்டார்.
இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது ஒரு சுவாரஸ்யமான கதை. ஒருநாள் ஒரு நபர் பாறை ஒன்றிலிருந்து தவறி விழுந்து முதுகில் கடும் காயமடைந்ததாக தன் நண்பர் மூலம் கேள்விப்பட்டார். கிறிஸ்டின் உடனே அந்த நபரை தனக்குத் தெரிந்த ஒரு மரபு வைத்தியரிடம் சிகிச்சைக்குக் கூட்டிச்செல்ல அதே நண்பரிடம் தெரிவித்துள்ளார். அடுத்த நாள் குரூட்ஷால்டன், கிறிஸ்டினை அழைத்து தன் நன்றியைக் கூறினார். அதாவது பாறையிலிருந்து விழுந்த நபர் குரூட்ஷால்டந்தான்.
இருவரும் ஒரு காஃபி ஷாப்பில் சந்திக்கின்றனர். அதன் பிறகு இவர் நெதர்லாந்து திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு அவர் கஃபே ஒன்றில் பவுன்சராக பணியாற்றி வந்தார். ஆனால் இருவரும் தொடர்ந்து ஆன்லைனில் தொடர்பில் இருந்தனர். அவர்கள் உறவு நெருக்கமானது.
இப்படியிருக்கயில் ஒருநாள் புதுவருட தினமொன்றில் கிறிஸ்டின் வீட்டிற்கு திடீர் வருகை தந்து சந்தோஷ அதிர்ச்சியில் ஆழ்த்தினார் குரூட்ஷால்டன், அங்கு 3 வாரங்கள் தங்கியிருந்தார். கிறிஸ்டினுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவரது கணவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
குழந்தைகளுக்கு குரூட்ஷால்டனைப் பிடித்துப் போக டாடி என்றே அவரை அழைக்கத் தொடங்கினர்.
கடந்த மே மாதம் பாலிக்கு வந்த குரூட்ஷால்டன் கிறிஸ்டின் பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது கிறிஸ்டினுடன் தன் மீதி வாழ்நாளைக் கழிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஜூன் 3ஆம் தேதி அவரை விமானநிலையதில் வழியனுப்ப வந்தார் கிறிஸ்டின். முத்தத்துடன் குட்பை சொன்னார் கிறிஸ்டின். இதுதான் அவர்களது கடைசி முத்தம்.
பயண தினத்தன்று விமான நிலையம் செல்லும் முன்பாக ஸ்கைப் உரையாடலில் "தந்தை உங்களைக் காண வந்து கொண்டிருக்கிறேன்... இனி நாம் ஒன்றாகவே இருப்போம்” என்று கூறியது கடைசி உரையாடலாகிப்போனது.