Last Updated : 15 Oct, 2017 11:16 AM

 

Published : 15 Oct 2017 11:16 AM
Last Updated : 15 Oct 2017 11:16 AM

ஏவுகணை சோதனைக்கு வடகொரியா மீண்டும் தயார்

அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியை தாக்கி அழிக் கும் சக்திவாய்ந்த ஏவுகணையை, சோதனை செய்து பார்க்க வடகொரியா தயாராகி வருவது தெரிய வந்துள்ளது.

சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை, அணுஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், இரு நாடுகளுக்கும் இடையில் பகிரங்கமாக போர் மிரட்டல் நிலவுகிறது.

இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிசக்தி வாய்ந்த ஏவுகணையை மீண்டும் சோதனை செய்து பார்க்க வடகொரியா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சியோலில் இருந்து வெளிவரும் ‘டோங்கா இல்போ’ என்ற பத்திரிகையில் அரசு தகவல்களை மேற்கொள் காட்டி வெளிவந்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட லாஞ்சர்கள் வடகொரிய தலைநகர் பியாங்யாங் அருகில் எடுத்துச் செல்லும் படங்கள் செயற்கைக்கோள் மூலம் கிடைத்துள்ளன. அதனால், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயாராகி வருவதாக தென் கொரியாவும் அமெரிக்காவும் சந்தேகிக்கின்றன.

ஏற்கெனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘வாசாங்-12’ என்ற ஏவுகணையை வடகொரியா சோதித்து பார்த்துவிட்டது. அது அமெரிக்காவின் குவாம் தீவு வரை பாய்ந்து தாக்க கூடியது. அந்த ஏவுகணை அல்லது அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கும் சக்திவாய்ந்த ‘வாசாங்-14’ ரக ஏவுகணையை வடகொரியா சோதித்து பார்க்க வாய்ப்புள்ளது.

அதற்கடுத்து அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை தாக்கி அழிக்கும் சக்திவாய்ந்த ‘வாசாங்-13’ ரக ஏவுகணையை சோதித்து பார்க்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு ‘டோங்கா இல்போ’ பத்திரிகை கூறியுள்ளது.

இதுகுறித்து கேட்ட போது அமெரிக்க ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ‘‘ராணுவ புலனாய்வு குறித்த தகவல்களை சொல்வதற்கில்லை. எனினும் வடகொரியாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’’ என்றார்.

இதற்கிடையில், அமெரிக்காவைச் சேர்ந்த ‘ரொனால்டு ரீகன்’ விமானம் தாங்கி போர்க் கப்பலும், தென் கொரியாவின் போர் கப்பலும் இணைந்து சமீப காலமாக கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் வடகொரியாவும் பதிலுக்கு தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வான்வெளியில் ஏவுகணைகளை வீசி சோதனை செய்து அதிர்ச்சி அளித்தது குறிப் பிடத்தக்கது.

இந்நிலையில், ‘அணுஆயுதங்கள் பொருத்தப்பட்ட ‘யுஎஸ்எஸ் மிச்சிகன்’ நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவின் பூசன் கடல் பகுதிக்கு நேற்றுமுன்தினம் வந்தடைந்துள்ளது. தென்கொரியாவும் அமெரிக்க கடற்படையும் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x