Published : 15 Jun 2023 06:29 PM
Last Updated : 15 Jun 2023 06:29 PM

உக்ரைன் அணை தகர்ப்பால் உலக அளவில் உணவுப் பாதுகாப்பில் பாதிப்பு: ஐ.நா கவலை

கீவ்: உக்ரைன் அணை தகர்ப்பு எதிரொலியால் உலக அளவில் உணவு பாதுகாப்பில் பாதிப்பு ஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையான கக்கோவ்காவை ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டப்பட்டது. அணையிலிருந்து பெருமளவு தண்ணீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். அணை தகர்ப்பு தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், உக்ரைன் அணை தகர்ப்பு நிகழ்வால் உலக அளவில் உணவுப் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. உதவித் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கூறும்போது, “அப்பகுதி உலகின் மையமாக இருந்தது. கிரீமியாவுக்கு மட்டும் மல்ல, உலகிற்கு மையமாக இருந்தது. உணவுப் பாதுகாப்பில் நாம் ஏற்கெனவே சிரமத்தில் இருக்கிறோம். இதன் காரணமாக உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை நிச்சயமாக அதிகரிக்கும்.

அடுத்த அறுவடைக்கு அறுவடை செய்வதிலும், விதைப்பதிலும் மிகப் பெரிய பிரச்சினைகளை நாம் காணப்போவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது. நிச்சயம் உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதான் நடக்கப் போகிறது” என்று தெரிவித்தார்.

உக்ரைனின் கெர்சன் பகுதியில் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே, கடந்த 1956-ம் ஆண்டு 98 அடி உயரத்தில், 3.2 கி.மீ நீளத்தில் கக்கோவ்கா அணை கட்டப்பட்டது. இங்கு கக்கோவ்கா நீர்மின் நிலையமும் உள்ளது. கிரிமியன் தீபகற்ப பகுதி, ஜபோரிச்ஜியா அணுமின் நிலையம் ஆகியவற்றுக்கு இந்த அணையிலிருந்துதான் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x