Published : 14 Jun 2023 07:02 AM
Last Updated : 14 Jun 2023 07:02 AM
புதுடெல்லி: சீனா தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வேகமாக விரிவுபடுத்தி வருகிறது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஐபிஆர்ஐ நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சீனாவிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 350 அணு ஆயுதங்கள் இருந்தன. தற்போது சீனாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 410 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவிடம் 164 அணு ஆயுதங்கள் உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா அல்லது ரஷ்யாவிடம் இருக்கும் அளவுக்கு சீனாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இருக்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை தொடர்ந்து புதிய ரக ஏவுகணைகளை அறிமுகம் செய்வதன் மூலம் இரு நாடுகளும் அணு ஆயுதங்களை விரிவுபடுத்துவதுபோல் தெரிகிறது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை தடுத்து அழிப்பதில் இந்தியா முக்கிய கவனம் செலுத்தினாலும், சீனாவுக்கு அப்பால் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் ஏவுகணைகளை உருவாக்குவதில் இந்தியா அதிக கவனம் செலுத்துவதுபோல் தெரிகிறது.
மொத்தம் உள்ள 9 அணு ஆயுதநாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகின்றன. உலகளவில் மொத்தம் 12,512 அணு ஆயுதங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 90% அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளது. ரஷ்யாவிடம் 5,889, அமெரிக்காவிடம் 5,244, பிரான்ஸிடம் 290, இங்கிலாந்திடம் 225, இஸ்ரேலிடம் 90, வடகொரியாவிடம் 30 அணு ஆயுதங்கள் உள்ளன.
சீனாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை விரிவுபடுத்துவதால், இந்தியாவும் வலுவான சக்தியுடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை இந்தியா அறிவித்தாலும், பதில் தாக்குதல் நடவடிக்கைக்கு இந்தியா வலுவுடன் இருக்க வேண்டியுள்ளது. அதனால் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளை குறிப்பாக அக்னி ரக ஏவுகணைகளை வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் 1,000 முதல் 2,000 கி.மீ வரை சென்று தாக்கும் புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. 5,000 கி.மீ தூரம் வரை சென்றுதாக்கும் அக்னி-5 ஏவுகணைகளை படையில் சேர்க்கும் நடவடிக்கையையும் இந்தியா மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை மெதுவாக விரிவுபடுத்துகிறது என்றாலும், சீனா தனது அணு ஆயுதங்களை தொடர்ந்து வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. ஆனால், இந்தியா புதிய தலைமுறை அக்னி ஏவுகணைகள் மற்றும்அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ரபேல் போர் விமானங்களை படையில் சேர்த்ததன் மூலம் தாக்குதலை தடுக்கும் திறனில் நம்பிக்கையுடன் உள்ளது.
இந்தியாவிடம் தற்போது ஐஎன்எஸ் அரிஹன்ட் என்ற ஒரே ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதிலிருந்து 750 கி.மீ தூரம் சென்று தாக்கும் கே-15 ரக அணு ஏவுகணை மட்டுமே வீச முடியும். ஆனால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிடம் அதிக எண்ணிக்கை அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவற்றில் இருந்து 5,000 கி.மீ சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவ முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT