

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபை ராணுவ கண்காணிப்புக் குழு தலைவராக கானா ராணுவ அதிகாரி டெலாலி ஜான்சன் சாக்யி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி – மூன் பிறப்பித்தார். முன்னதாக தென்கொரியாவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் யங் பம் சோய், தலைமை ராணுவ கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அவரின் இரண்டு ஆண்டு பதவிக் காலம் கடந்த ஜூனுடன் முடிவடைந்தது. இதையடுத்து அப்பதவிக்கு மேஜர் ஜெனரல் டெலாலி ஜான்சன் சாக்யி நியமிக்கப்பட்டுள்ளார்.
59 வயதாகும் சாக்யி, கானா நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஆவார். இதற்கு முன் கானா நாட்டு ராணுவத்திலும், சர்வதேச அளவில் ஐ.நா. சார்பிலும் முக்கியமான பல பொறுப்புகளை வகித்துள்ளார். சமீபத்தில் தெற்கு சூடானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை கமாண்டராக பணியாற்றினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ராணுவ கண்காணிப்புக் குழு, நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான கால கட்டத்தில் இஸ்லாமாபாத்தை தலைமையிடமாகக் கொண்டும், மே முதல் அக்டோபர் வரை காஷ்மீரின் நகரை தலைமையிடமாகக் கொண்டும் செயல்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை கண்காணிக்கும் பணியில் இந்த குழு ஈடுபட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்புப் பணியில் 1949-ம் ஆண்டு முதல் இந்த குழு செயல்பட்டு வருகிறது.