

சீனாவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவி ஏற்கவுள்ள ஜி ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின்பிங் இரண்டாவது முறையாக சீனாவின் அதிபராக பதவி ஏற்கவுள்ளார்.
இதனையடுத்து உலகத் தலைவர்கள் பலரும் ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடியும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடி பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், "சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துகள். இந்திய - சீன உறவுகள் மேலும் முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் இப்பதிவு ஆங்கிலம், மாண்டரின் (சீனாவில் பேச்சு வழக்கிலுள்ள மொழி) என்று இரண்டு மொழிகளிலும் பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங் (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அந்நாட்டு அதிபராகவும் பொறுப்பேற்றார். சீனாவைப் பொறுத்தவரை சிபிசி பொதுச் செயலாளர்தான் நாட்டின் அதிபராகவும் இருப்பார். இவரது பதவிக் காலம் முடியவுள்ள நிலையில், 19-வது சிபிசி தேசிய மாநாடு கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது.
இதில் 2,350-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் ஜி ஜின்பிங் 2-வது முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக வரும் 2022 வரை இந்தப் பதவியில் நீடிப்பார் என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, 2-வது முறையாக நாட்டின் அதிபராகவும் இவர் பொறுப்பேற்க உள்ளார்.