Published : 20 Oct 2017 10:53 AM
Last Updated : 20 Oct 2017 10:53 AM

அமெரிக்க துணை அதிபர் உட்பட உலக தலைவர்கள் தீபாவளி வாழ்த்து

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் எம்.பி.க்கள், பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மைக் பென்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவரது வாழ்விலும் இருள் நீங்கி, அமைதி, வளம் மற்றும் வெற்றி ஆகிய ஒளி பிறக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இறுதியில் தீய சக்தியை நல்ல சக்தியும் இருளை ஒளியும் வெற்றி கொண்டது போல அனைவருடைய நம்பிக்கையும் நிறைவேறும். பிரிட்டன் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் இந்தியர்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடும்பத்தினருடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுவது போன்ற ஒரு படத்தை ட்ரம்ப் மகள் இவாங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன், “உலகம் முழுவதும் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகிய அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். விரைவில் இந்தியா வர ஆவலாக உள்ளேன்” என இவாங்கா பதிவிட்டுள்ளார்.

இதுபோல அமெரிக்க எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால், இலியானா ரோஸ்-லெதினென், நியூயார்க் மேயர் பில் தே பிளாசியோ, வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் உள்ளிட்டோர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக், பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவன தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x