Published : 10 Jul 2014 10:00 AM
Last Updated : 10 Jul 2014 10:00 AM

சீனாவுடன் உறவை மேம்படுத்த புதிய திட்டம்: அமெரிக்க அதிபர் ஒபாமா அறிக்கை

சீனாவுடன் உறவை மேம்படுத்த புதிய செயல் திட்டத்தை வகுக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அந்நாட்டுகளுடனான கருத்து வேறுபாடுகளைக் குறைக்கும் வகையில் அமெரிக்க இந்த புதிய செயல் திட்டத்தை உருவாக்குவதில் முனைப்புடன் உள்ளது என்றும் ஒபாமா கூறியுள்ளார்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் அமெரிக்க – சீன பொருளாதார மேம்பாடு தொடர்பான ஆண்டுக் கூட்டம் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு ஒபாமா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அமைதியான, ஸ்திரமான, வேகமாக வளர்ந்து வரும் சீனாவை அமெரிக்க வரவேற்கிறது. சீனாவுடன் வேறுபாடுகளைக் களைந்து உறவுகளை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை வகுக்க அமெரிக்கா முனைப்புடன் பணியாற்றி வருகிறது.

எந்த விவகாரத்தையும் அமெரிக்காவும் சீனாவும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்ப்பது இல்லை. இரு நாடுகளுமே வெவ்வேறு வரலாற்று, கலாசார பின்னணிகளைக் கொண்டவை. அதே நேரத்தில் இருநாடுகளுக்கும் பொதுவான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உறவை மேம்படுத்த வேண்டியுள்ளது.

அமெரிக்கா – சீனா இடையே ராஜாங்கரீதியிலான உறவு ஏற்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை நாம் பல்வேறு விஷயங்களில் சிறப்பாக இணைந்து செயல்பட்டுள்ளோம். எதிர்காலத்தில் இந்த உறவு தொடர்ந்து மேம்பட நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பிராந்திய பாதுகாப்பு விவகாரம், சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவற்றில் இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. முக்கியமாக ஈரானின் அணு ஆயுத திட்ட விவகாரம், கொரிய தீபகற்ப பிரச்சினை, ஆப்கானிஸ்தான் பிரச்சினை ஆகியவற்றில் நல்ல ஒத்துழைப்பு உள்ளது.

இது தவிர பொருளாதாரம் தொடர்பான விஷயங்கள், இணைய தள பாதுகாப்பு, காப்புரிமை விவகாரங்கள் பேசப்பட்ட வேண்டியுள்ளன. நவம்பர் மாதம் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்துக்காக நான் சீனா வரும் போது இது தொடர்பாக அந்நாட்டு தலைவர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்த இருக்கிறேன். இது எனது இரண்டாவது சீன பயணமாக அமையும் என்று ஒபாமா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x