

இந்திய வம்சாவளி அமெரிக்க அதிகாரிகளை இந்தியர்களாகக் கருதி கேள்வி எழுப்பிய அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி. கர்ட் கிளாசன், பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் துறையின் துணைச் செயலாளராக நிஷா தேசாய் பிஸ்வால் பதவி வகிக்கிறார். இதுபோல் வர்த்தகத் துறையின் சர்வதேச சந்தைகளுக்கான துணைச் செயலாளராக அருண் குமார் பொறுப்பு வகிக்கிறார். இருவரும் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள். ஒபாமா நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றனர்.
இருவரும், இந்திய அமெரிக்க உறவுகள் தொடர்பான நாடாளுமன்ற துணை கமிட்டி முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது கமிட்டியில் இடம்பெற்றிருந்த குடியரசு கட்சியின் புதிய எம்.பி. கர்ட் கிளாசன், அவர்களை இந்திய அரசின் பிரதிநிதிகளைப் போல கருதி உங்கள் நாடு, உங்கள் அரசு எனக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.
“உங்கள் நாட்டு மூலதனம் இங்கு பொருள்களை உற்பத்தி செய்யவும் வேலைவாய்ப்பு அளிக்கவும் வரவேற்கப்படுவதுபோல, அமெரிக்க மூலதனமும் அங்கு வரவேற்கப்படவேண்டும். சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக உங்கள் அரசின் (இந்திய அரசின்) ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன். அதை நாங்கள் பெறமுடியுமா?” என்றார்.
இந்தக் கேள்வியால் ஒருகணம் திகைத்த நிஷா பிஸ்வால், பின்னர் சமாளித்துக்கொண்டு, “உங்கள் கேள்வி இந்திய அரசுக்கானது என நினைக்கிறேன். உங்கள் கருத்துகளை அமெரிக்க அரசு சார்பில் இந்திய அரசுடன் நாங்கள் பகிர்ந்துகொள்வோம்” என்றார்.
உடனே தனது தவறை உணர்ந்த கிளாசன் தனது செய லுக்கு வருத்தம் தெரிவித்தார். “நான் அவசரப்பட்டு பேசிவிட் டேன். இதற்காக வருந்துகிறேன். உங்கள் நாட்டை நான் நன்கு அறிவேன். உங்கள் நாட்டை நேசிக்கிறேன். புதிய அரசின் கீழ் இந்தியாவின் எதிர்காலம் சிறப் பாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.