

ஆப்கான் தலைநகர் காபூலில், சர்வதேச விமான நிலையத்தின் மீது வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கி சூடு நடத்தியும் தீவிரவாதிகள் தாக்கி உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று காலை 4.30 மணி முதல் துப்பாக்கி சூடு நடத்தியும், ராக்கெட் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தின் அருகே கட்டுமான நிலையில் இருக்கும் கட்டடம் ஒன்றை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்திய ஆப்கான் பாதுகாப்புப் படையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தனர். இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ள ஆப்கான் உள்துறை அமைச்சகம், சேதம் தொடர்பான எந்த தகவலையும் வெளியிடவில்லை.
மேலும், இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் காபூல் சர்வதேச விமானநிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.