Published : 08 Jun 2023 05:40 PM
Last Updated : 08 Jun 2023 05:40 PM

பிரான்ஸில் 4 குழந்தைகள் உள்பட 6 பேருக்கு கத்திக் குத்து - தாக்கிய நபர் கைது

தாக்குதல் நடந்த இடம்

பாரிஸ்: பிரான்ஸின் ஆல்ப்ஸ் நகரில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸின் ஆப்ல்ஸ் நகரின் அன்னெசி சதுக்கத்தில் இன்று காலை விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் உள்பட பலரை நபர் ஒருவர் கத்தியால் குத்தி உள்ளார். இதில் 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது. இவர்களில் இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்ட பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்டு தர்மான், "அன்னெசி நகரில் உள்ள ஏரியின் ஓரத்தில் இருக்கும் சதுக்கத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சக அதிகாரிகள், "தற்போது கிடைத்துள்ள முதற்கட்டத் தகவலின்படி 4 குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்கள். இது முதற்கட்டத் தகவல்தான். இந்த எண்ணிக்கை உயரலாம். தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை" என தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அன்னெசி பூங்காவில் இன்று காலை நிகழ்ந்த தாக்குதல் கோழைத்தனமானது. இந்தத் தாக்குதலால் குழந்தைகளும் பெரியவர்களும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தால் நாடு அதிர்ச்சி அடைந்துள்ளது. காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். அவர்களுக்கு அவசர உதவி அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x