Published : 17 Oct 2017 09:21 AM
Last Updated : 17 Oct 2017 09:21 AM

உலக மசாலா: நெகிழ வைத்துவிட்டார்கள் இந்த மனிதர்கள்!

மெரிக்காவைச் சேர்ந்த எரிக் ஸ்மால்ரிட்ஜ் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரது ட்ரக் பழுதடைந்து நின்றுவிட்டது. அப்போது அவரது நண்பர் ஒருவர் தன்னுடைய காரை ஓட்டி வரும்படிக் கேட்டுக்கொண்டார். நண்பரும் அவருடன் இருந்தவர்களும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தனர். அதனால் காரை ஓட்டுவதற்கு எரிக் சம்மதித்தார். அதிகாலை 2.30 மணிக்கு கார் மிக மோசமான விபத்துக்குள்ளானது. அதில் வேலை முடித்து, திரும்பிக்கொண்டிருந்த 20 வயது மேகன் நேப்பியரும் லிசா டிக்சனும் உயிரிழந்தனர். மகளை இழந்த ரெனீ நேப்பியர் துயரத்தின் எல்லைக்கே சென்றார். விபத்து ஏற்படுத்திய எரிக்குக்கு அதிகக் காலம் தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். வழக்கு நடந்த காலங்களில் பல முறை எரிக் உயிரிழந்த பெண்களின் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டார். தன் செயலுக்கு வருந்தி, கண்ணீர் வடித்தார். இறுதியில் ஒவ்வொரு பெண்ணுக்கும் 11 ஆண்டுகள் வீதம் 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு குடும்பங்களும் தன்னை மன்னிக்கும்படி கடிதங்கள் எழுதினார் எரிக்.

“அவரது கடிதம் என்னை உலுக்கியது. காலம் செல்லச் செல்ல என் ரணமும் சிறிது குறைந்திருந்தது. அதனால் அவரது குடும்பத்தினரைச் சென்று பார்த்தேன். எரிக்கிடமும் பலமுறை பேசினேன். மகளை இழந்து நான் வாடுவதைப்போலவே, குற்றம் செய்துவிட்டு எரிக்கும் வாடிக்கொண்டிருந்தார். அவரது வலி எனக்குப் புரிந்தது. சந்தர்ப்பவசத்தால் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து என்பதையும் அவர் எவ்வளவு நல்லவர் என்பதையும் அறிந்துகொண்டேன். அவர் தண்டனை பெறுவதால் என் மகள் திரும்பி வரப் போவதில்லை. இந்தத் தண்டனை அவரை மோசமானவராகக் கூட மாற்றிவிடலாம். அதற்குப் பதிலாக அவரை மன்னித்தால், அதுவே அவருக்கான வாழ்நாள் தண்டனையாக அமைந்துவிடும் என்று முடிவு செய்தேன். நானே மீண்டும் நீதிமன்றம் சென்றேன். தண்டனையைப் பாதியாகக் குறைக்கும்படிக் கேட்டுக்கொண்டேன். அதாவது என் மகளுக்கான தண்டனையை ரத்து செய்துவிடச் சொன்னேன். நீதிபதியும் எரிக்கின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். தண்டனை கிடைத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு, தண்டனைக் காலம் பாதியாகக் குறைக்கப்பட்டது. நான் மேகன் நேப்பியர் என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்தேன். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என்பதையும் சாலை விதிகளையும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த அறக்கட்டளையின் பிரதான நோக்கம். தண்டனை முடிந்து வெளியே வந்த எரிக், இந்த அறக்கட்டளையில் இணைந்துகொண்டார். அவரும் நானும் எங்கள் சொந்த கதைகளைக் கூறி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் இறந்து போகிறார்கள். மனிதர்களின் அஜாக்கிரதையால் ஏற்படும் உயிரிழப்புகளை நம்மால் தடுக்க முடியும். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது, போனால் திரும்பி வராது” என்கிறார் ரெனீ நேப்பியர்.

நெகிழ வைத்துவிட்டார்கள் இந்த மனிதர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x