சர்ச்சில், மண்டேலாவுக்கு கிடைத்த கவுரவம் போல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ம் தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவது இது இரண்டாவது முறை.

இத்தகைய கவுரவம், இதற்கு முன்பு பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட வெகு சில உலகத் தலைவர்களுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து, பிரதிநிதிகள் அவைத் தலைவர் கெவின் மெக்கார்த்தி, செனட் அவையின் பெரும்பான்மைத் தலைவர் சுக் ஷூமர் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான தனது தொலைநோக்குப் பார்வை, இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ள உலகளாவிய சவால்கள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2016-ம்ஆண்டு அமெரிக்கா சென்றபோது அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடிக்கு முன்பு, மன்மோகன் சிங் (2005), ஏ.பி. வாஜ்பாய் (2000), பி.வி.நரசிம்ம ராவ் (1994), ராஜீவ் காந்தி (1985) ஆகிய இந்தியப் பிரதமர்கள், அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தியுள்ளனர்.

மேலும், பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நட்புறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதைத் தொடர்ந்து அதிபர் ஜோ பைடன், மனைவி ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிக்கவுள்ளனர்.

பின்னர் அமெரிக்க வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in