Published : 03 Oct 2017 10:03 AM
Last Updated : 03 Oct 2017 10:03 AM

உலக மசாலா: அதிர்ச்சியில் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் சரி…

மெரிக்காவின் டலாஸ் நகரில் இயங்கிவரும் ஹர்ட்ஸ் டோனட் உணவகத்தில் ஆர்டர் செய்பவர்களுக்கு விநோதமான முறையில் டெலிவரி செய்கிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் திட மனத்துடன் இருந்தால்தான் டோனட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். “பொதுவாக ஹால்லோவீன் பண்டிகையின்போதுதான் விநோதமாக ஒப்பனை செய்துகொண்டு வலம்வருவார்கள். அதை ஆண்டு முழுவதும் செய்தால் என்ன என்று தோன்றியது. அதனால்தான் பயங்கரமான கோமாளி வேடமிட்ட மனிதர்களை டோனட் டெலிவரிக்கு அனுப்பும் திட்டத்தை ஆரம்பித்தோம். சாதாரண டெலிவரி கட்டணத்தை விடக் கூடுதலாக 328 ரூபாய் கொடுத்தால் கோமாளி மூலம் டெலிவரி செய்வோம். திடீரென்று கோமாளியைப் பார்த்தால் பயம் ஏற்படும். ஆனால் சில நிமிடங்களில் அந்த உருவத்தை ரசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். விருந்தினர்கள் வருகை, விழாக்கள், பண்டிகைகள் போன்ற நிகழ்ச்சிகளின்போது கோமாளி மூலம் டோனட் டெலிவரி கேட்கிறார்கள். கோமாளி அவர்கள் வீட்டுக்கு டோனட்களுடன் செல்லும்போது மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் பல மடங்கு அதிகரித்துவிடுகிறது. ஆரம்பத்தில் இந்தத் திட்டம் வெற்றி பெறுமா என்று அச்சம் இருந்தது. ஆனால் சாதாரண டெலிவரியைவிட கோமாளி டெலிவரியை அதிக அளவில் மக்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டது எங்களுக்கே ஆனந்த அதிர்ச்சியாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இதுவரை கோமாளி டெலிவரியைச் செய்துவந்தோம். இனி எந்த நேரமும் இந்தச் சேவையைக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டோம். இந்த வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள நாங்கள் இன்னும் பல புதுமையான டெலிவரி திட்டங்களைக் கொண்டு வரவேண்டும். இப்போதைக்கு இந்தத் திட்டத்தை மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தும் பணியில் இறங்கியிருக்கிறோம்” என்கிறார் உரிமையாளர்களில் ஒருவரான காஸ் க்ளெக்.

அதிர்ச்சியில் அசம்பாவிதம் நடக்காமல் இருந்தால் சரி…

லி

ன்க்ஸ் என்பது ஒருவகை காட்டுப் பூனை. காட்டுப் பகுதியில் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் புதர்கள், நாணல் செடிகள் போன்ற பகுதிகளில் வாழக்கூடியது. பறவைகளையும் சிறிய விலங்குகளையும் வேட்டையாடி உண்ணும். மனிதர்களை நாடி இவை வருவதில்லை. அலாஸ்காவில் உள்ள டிம் நியூட்டனின் கதவை யாரோ பிராண்டுவதுபோல் சத்தம் கேட்டது. “கரடி அல்லது ஆபத்தான விலங்குகள் ஏதாவது வந்திருக்கலாம் என்று நினைத்தேன். சத்தம் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அங்கே சில லின்க்ஸ் குட்டிகள் விளையாடிக்கொண்டிருந்தன. எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. லின்க்ஸ் மனிதர்களைக் கண்டால் ஓடிவிடக் கூடியவை. எப்படி மனிதர்களின் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தன என்று யோசித்தபடி கதவைத் திறந்தேன். இன்னும் 3 குட்டிகளுடன் தாய் வந்துசேர்ந்தது. 7 குட்டிகளும் தாயும் விளையாடும் காட்சி அற்புதமாக இருந்தது. என் கேமராவை எடுத்துக்கொண்டு அவற்றை வெகு அருகில் படம் பிடித்தேன். குட்டிகள் சண்டை போட்டன, கட்டி உருண்டன. ஆனால் அம்மாவின் குரலுக்குக் கட்டுப்பட்டன. ஒரு மணி நேரம்வரை இப்படி விளையாடிவிட்டு, மீண்டும் தமது இருப்பிடத்தை நோக்கிக் கிளம்பின. யாரும் எளிதில் பார்க்க முடியாத லின்க்ஸ் குடும்பத்தை, நான் என் வீட்டிலேயே பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் டிம் நியூட்டன்.

அடடா! வீடு தேடி வந்த அரிய விருந்தாளிகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x