

பிலிப்பைன்ஸ் கடலில் மாயமான இந்திய மாலுமிகளைத் தேடும் பணி 5-வது நாளாக தொடர்கிறது.
பிலிப்பைன்ஸ் அருகே கடந்த வெள்ளிக்கிழமை அன்று சரக்குக் கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்தது. எம்.வி. எமரால்ட் ஸ்டார் என்ற இந்தக் கப்பலில் 26 பேர் இருந்தனர். இவர்களில் 10 மாலுமிகளைக் காணவில்லை. கப்பலில் இருந்த 26 பேரில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாயமான மாலுமிகளைத் தேடும் பணியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான பி-81 கப்பலும் ஜப்பானிய கடலோர காவற்படைக் கப்பலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மாலுமிகளைத் தேடும் பணி குறித்து எம்.வி. எமரால்ட் ஸ்டார் கப்பலின் உரிமை நிறுவனமான விரிதி மேரிடைம் பிரைவேட் லிமிடெட்டின் செய்தித்தொடர்பாளர், "காணாமல் போனவர்களைப் பற்றி இன்னும் எங்களுக்கு எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.