Last Updated : 25 Nov, 2014 02:33 PM

 

Published : 25 Nov 2014 02:33 PM
Last Updated : 25 Nov 2014 02:33 PM

காப்பீடு மசோதாவை ஆய்வு செய்யும் தேர்வுக் குழுவுக்கு டிச.12 வரை அவகாசம்: மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

காப்பீடு மசோதாவை ஆய்வு செய்யும் மாநிலங்களவை தேர்வுக் குழுவுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அக்குழு வரும் டிசம்பர் 12-ம் தேதி அறிக்கையை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

காப்பீட்டுத் துறையில் தற் போது 26 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை 49 சதவீதமாக உயர்த்தும் வகையில் மத்திய அரசு, கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மசோதா கொண்டு வந்தது. அதற்கு எதிர்க் கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்த தைத் தொடர்ந்து, மாநிலங்களவை பாஜக உறுப்பினர் சந்தன் மித்ரா தலைமையிலான தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அந்த மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை வரும் 28-ம் தேதி தாக்கல் செய்ய வேண் டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டிசம்பர் 12-ம் தேதி வரை கால அவகாசம் கோரி சந்தன் மித்ரா, மாநிலங்களவையில் நேற்று தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மார்க்சிஸ்ட் எம்.பி. ராஜீவ், “இக்குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன். இது போன்று கால அவகாசம் கோருவதற்கு முன்பு, குழு உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்” என்று கூறினார். அக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள டேரக் ஓபிரையன் (திரிணமூல் காங்கிரஸ்), ஜே.டி.சீலம் (காங்கிரஸ்) ஆகியோரும், தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றனர்.

அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “இக்குழுவில் உறுப்பினர்களாக இருந்த ஜே.பி.நத்தா, முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் தற்போது அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். எனவே அவர்களுக்கு பதிலாக வி.பி.சிங் பட்னோர், ரங்கசாயி ராமகிருஷ்ணா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. குழு தொடர்ந்து செயல்பட வேண்டுமா, அல்லது கலைக்கப்பட வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

ஆனால், சந்தன் மித்ரா கொண்டு வந்த தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும். முறைப்படி குழுவின் கூட்டத்தை நடத்தி முடிவு எடுக்கப்பட்ட பின்பு, கால அவகாசம் கோரி மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். அதை அருண் ஜேட்லி ஏற்கவில்லை. இதை யடுத்து குரல் வாக்கெடுப்பின் மூலம் சந்தன் மித்ராவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடைமுறை மீறல்

பின்னர், செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது: நாடாளுமன்ற நடைமுறைகளை மதிக்காமல் செயல்படும் மத்திய அரசின் போக்கு கவலையளிக்கிறது. இனிவரும் காலங்களிலும், இதே போன்று மிரட்டல் மூலமும், நடைமுறை விதிகளை மீறியும் நடந்து கொள்வார்கள் என்றே தெரிகிறது. இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x