Last Updated : 03 Oct, 2014 08:14 PM

 

Published : 03 Oct 2014 08:14 PM
Last Updated : 03 Oct 2014 08:14 PM

உன்முக்த் சந்த், அமித் மிஸ்ரா அபாரம்: வெஸ்ட் இண்டீஸ் அணியை நொறுக்கியது இந்தியா-ஏ

மும்பையில் நடைபெற்ற பயிற்சி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணி மேற்கிந்திய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பொலார்ட் தலைமை வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸில் வென்று முதலில் பேட் செய்து 38.1 ஓவர்களில் 148 ரன்களுக்குச் சுருண்டது. அமித் மிஸ்ரா அபாரமான 10 ஓவர்களை வீசி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற லெக் பிரேக்-கூக்ளி பவுலர் கரன் சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய மனோஜ் திவாரி தலைமை இந்தியா ஏ அணி உன்முக்த் சந்த் (79 நாட் அவுட்) அபார ஆட்டத்தினால் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு எதிராக ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் ஆட வந்த மேற்கிந்திய அணி இன்று பிரபர்ன் மைதானத்தில் அடைந்த தோல்வியினால் பெரும் பின்னடைவு கண்டுள்ளது.

அமித் மிஸ்ரா தனது கூக்ளிகலால் கெய்ரன் பொலார்ட் (2), டேரன் சமி (0) ஆகியோரை வீழ்த்தி பிறகு ஜெரோம் டெய்லரை பவுல்டு செய்தார்.

மர்லான் சாமுயெல்ஸ் தவிர ஒருவரும் சிறப்பாக ஆடவில்லை. இவர் 59 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார். இவரும் ஜேசன் ஹோல்டரும் (21) இணைந்து 6வது விக்கெட்டுக்காக 47 ரன்களைச் சேர்த்தனர்.

தொடக்க வீரர் லியான் ஜான்சன் (0), ஜஸ்பிரித் பும்ரா பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். லெண்டில் சிம்மன்ஸ் 12 ரன்னில் ரிட்டையர்ட் அவுட் ஆனார்.

கிமார் ரோச் அடித்த 10 ரன்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 4 பேர்களே இரட்டை இலக்கத்தை எட்டினர்.

இலக்கைத் துரத்திய போது இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் முரளி விஜய், உன்முக்த் சந்துடன் களமிறங்கினார். இவர் பொறுமையான 26 ரன்களை எடுத்து கிமார் ரோச்சிடம் ஆட்டமிழந்தார். ஆனால் மறு முனையில் உன்முக்த் சிறப்பாக ஆட இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்காக 73 பந்துகளில் 71 ரன்களைச் சேர்த்தனர்.

உன்முக்த் சந்த் 81 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 79 ரன்கள் எடுக்க கருண் நாயர் 3 பவுண்டரி மற்றும் சிக்சருடன் 36 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க இருவரும் ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனைத்து சிறந்த வீச்சாளர்களும் இருந்தனர். கிமார் ரோச், ரவி ராம்பால், ஜேசன் ஹோல்டர், ஜெரோம் டெய்லர் ஆகியோர் இருந்தும் 4 அல்லது 5 விக்கெட்டுகளைக் கூட கைப்பற்ற முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x